பாரத ரத்னா விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ்!


பாரத ரத்னா விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ்!
x
தினத்தந்தி 5 Oct 2018 12:59 PM IST (Updated: 5 Oct 2018 12:59 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் உயரிய கவுரவமான பாரத ரத்னா விருது பெற்ற, விஞ்ஞானிகளில் ஒருவர், சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ். சுருக்கமாக சி.என்.ஆர்.ராவ் என்று இவரை அழைக்கிறார்கள்.

உலகப்புகழ்பெற்ற இந்திய வேதியியல் விஞ்ஞானி.இந்திய பிரத மரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார்.

ராவ், பெங்களூரில் 1934-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி பிறந்தார். பெங்களூர் இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தன் வாழ்க்கையை தொடங்கினார். கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் துறைத் தலைவர், இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர், ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆய்வு மையத்தின் தலைவர் போன்ற பல முக்கியமான பொறுப்புகளை வகித்திருக்கிறார். பாரதப் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக 2 முறை பணியாற்றினார்.

சி.என்.ஆர். ராவ், வேதி மூலக்கூறு ஆராய்ச்சிகளில் சிறந்தவராக விளங்கினார். வேதிப் பொருட்களின் திடநிலை மற்றும் கட்டமைப்பு ஆராய்ச்சிக்காக சிறப்பு கவுரவங்கள் பெற்றவர். 2013-ல் இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. இந்திய அறிவியல் விருது, பத்மஸ்ரீ உள்பட இன்னும் பல கவுரவங்களையும் பெற்றுள்ளார். மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்திற்க்கு இவர் துணையாக இருந்தார்.

எச்.இண்டக்ஸ் எனப்படும் சிறப்புக்குரிய உலக விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் என்ற சிறப்புக்குரியவர். விஞ்ஞானிகளால், யாரு டைய கண்டுபிடிப்பு கருதுகோள்கள் அதிகமாக உதா ரணம் காட்டப்படுகின்றனவோ அவர்களின் பட்டியல் எச்.இண்டக்ஸ் என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. இதில் இடம் பெற்ற 100 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆவார்.

உலகின் முக்கிய அறிவியல் அகாடமிகள் பலவற்றில் அங்கத்தினராக இடம் பெற்ற விஞ்ஞானிகளில் ஒரு இந்தியர் என்ற சிறப்பு பெற்றவர். சீன அறிவியல் கழகம், இவரை கவுரவ வெளிநாட்டு உறுப்பினராக தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராவ், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருதுகோள்களை முன்வைத்துள்ள விஞ்ஞானியாக விளங்குகிறார். அந்த கருதுகோள்கள் பின்னால் வரும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு உத்வேகம் தருவதாகவும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் தூண்டுகோலாக அமையும்.

வேதியியல் ஆராய்ச்சி துறையில் 50 ஆண்டு காலமாக இருக்கும் அவர்,1500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளார்.

Next Story