மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்தது: நெல்லையில் இடியுடன் பலத்த மழை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
நெல்லையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது.
நெல்லை,
நெல்லையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இடி-மின்னலுடன் மழை
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒருசில பகுதிகளில் சாரல் மழையும், மற்ற இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை நகரில் பிற்பகல் 3 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், சிந்துபூந்துறை, ஈரடுக்கு மேம்பாலம், வ.உ.சி. மைதான சிறுவர் பூங்கா, அண்ணா விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இடி, மின்னல் தாக்கியதில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பெருமாள்புரம் பகுதியில் ஒரு மரம் சாலையில் சாய்ந்தது. அங்கு பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
வீட்டின் மேற்கூரையில் தீ
பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் திருமால்நகரை சேர்ந்த அருள்செல்வம் என்பவர் தனது வீட்டு மாடியில் உடற்பயிற்சி கூடம் அமைத்துள்ளார். மழையின்போது திடீரென மின்னல் தாக்கியதில் இந்த உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருந்தபோதும், மேற்கூரை சேதம் அடைந்தது.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் மழைநீர் புகுந்தது. உடனே தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே, அந்த அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், குற்றாலம் பகுதியில் காலை 11 மணி அளவில் சாரல் மழை பெய்தது. இதேபோல் தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், அம்பை, கடையநல்லூர், சங்கரன்கோவில், மானூர், ராதாபுரம், நாங்குநேரி, சிவகிரி உள்ளிட்ட பல ஊர்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 143 அடியாகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 196 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
மழையால் மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 250 கனஅடியாக அதிகரித்தது. மாலை 4 மணி நிலவரப்படி பாபநாசம் அணையின் மேல் பகுதியில் 19 மில்லி மீட்டர் மழையும், கீழ் அணைப்பகுதியில் 16 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
மழை அளவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 248 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் நெல்லையில் அதிகபட்சமாக 67 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல் மாவட்டத்தில் நேற்று மாலையில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அம்பை- 4.20, ஆய்க்குடி-29, சேரன்மாதேவி-20.40, மணிமுத்தாறு- 5, நாங்குநேரி-6, பாளையங்கோட்டை-20, பாபநாசம்-19, ராதாபுரம்-64, செங்கோட்டை- 4, தென்காசி-20.9, நெல்லை-67.
Related Tags :
Next Story