ரூ.51 கோடி செலவில் தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் மேம்படுத்தப்படும்
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.51 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.51 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
ரூ.51 கோடி செலவில்...
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பழைய பஸ் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. தற்போது மாநகரத்தின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் பழைய பஸ் நிலையம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடியான இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் 1.53 ஏக்கர் பரப்பளவில் 7 பஸ்கள் நிறுத்துவதற்கான வழித்தடங்களுடன், அரசு மற்றும் தனியார் மொபசல் பஸ்கள் 987 நடைவீதமும், மினி பஸ்கள் 280 நடைவீதமும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பழைய பஸ் நிலையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.51 கோடி செலவில் 4 மாடி கட்டிடங்களுடன் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. பழைய பஸ் நிலையத்தின் இடப்பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான டெப்போவை இணைத்து 3.36 ஏக்கர் பரப்பளவில் புதிய பொலிவுடன் தரைதளத்தில் வெளியூர் மற்றும் மினி பஸ் நிறுத்த ஏதுவாக 31 பஸ் நிறுத்த வழித்தடங்களுடன் 6 நவீன கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
லிப்ட் வசதி
பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கம் குறித்த விசாரணை மையம், பஸ்கள் முன்பதிவு மையம், போலீஸ் கட்டுப்பாட்டு அறை, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு தனி அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, சுகாதார அலுவலர் அறை, தானியங்கி பணம் பெறும் எந்திரம் மற்றும் மருந்து கடை ஆகியன கட்டப்பட உள்ளன.
கூடுதலாக பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகள் தங்குவதற்கு 60 இருக்கைகளுடன் கூடிய குளிர்சாதன அறை ஒன்றும், 131 இருக்கைகளுடன் கூடிய சாதாரண அறை ஒன்றும் கட்டப்பட உள்ளன.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காரில் வருபவர்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல ஏதுவாக தனியாக 2 பிக்அப் பாயின்ட் அமைக்கப்பட உள்ளது. பொது மக்கள் பஸ் நிலையத்தின் முதல் தளம், 2–வது, 3–வது மற்றும் 4–வது தளத்திற்கு செல்ல எஸ்கலேட்டர்ஸ், லிப்ட் வசதிகள் செய்யப்பட இருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் பழைய பஸ் நிலையம் புதுப்பொலிவு பெற்று மிடுக்கான தோற்றத்துடன், நவீனமுறையில் மாநகரப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story