மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு


மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு
x
தினத்தந்தி 5 Oct 2018 9:28 PM GMT (Updated: 5 Oct 2018 9:28 PM GMT)

மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. வீணாக வெளியேறிய தண்ணீரில் இளைஞர்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குளித்தலையில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து மணத்தட்டை என்ற இடத்தில் உள்ள பம்ப் ஹவுஸ் மூலம் சின்னரெட்டியபட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

பெரிய அளவிலான குழாய் மூலம் காவிரி குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. மணப்பாறை - குளித்தலை சாலையில் கலிங்கப்பட்டி என்ற இடத்தில் உள்ள காவிரி குடிநீர் குழாய் மிகவும் சேதமடைந்து இருந்தது. இந்த நிலையில் அந்த குழாயின் ஒரு பகுதியில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பீய்ச்சி அடித்து வெளியேறியது.

சுமார் 20 அடி உயரம் வரை இரு பிரிவாக நீர் வெளியேறி சாலையில்கொட்டியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர்.இதைப் பார்த்த இளைஞர்கள் வீணாக வெளியேறிய தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். பலரும் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்தனர்.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அதிகாரிகள் உடைந்த குழாய்க்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து நீரின் அளவு சுமார் 30 நிமிடத்தில் முழுவதுமாக குறைந்தது. இருப்பினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீணாக சென்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் அந்த குழாயில் முழுவதுமாக மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் அல்லது புதிதாக மாற்றிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story