மாணவன் பலியான வழக்கு: இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


மாணவன் பலியான வழக்கு: இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 6 Oct 2018 4:00 AM IST (Updated: 6 Oct 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலியான வழக்கில் இழப்பீடு தொகையை வழங்காததால் சேலம் கோட்ட அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாமு என்ற முருகேசன். இவருடைய மகன் திருப்பதி (வயது 14), புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி மாலை திருப்பதி பள்ளியில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது, திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற சேலம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த திருப்பதியை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இறந்த மாணவனின் தந்தை சாமு வாணியம்பாடி கோர்ட்டில் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் இறந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சத்து 4 ஆயிரத்து 117 இழப்பீட்டு தொகையை சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்காததால் சாமு வாணியம்பாடி கோர்ட்டில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரன் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி வாணியம்பாடி பஸ் நிலையத்திற்கு வந்த சேலம் கோட்ட அரசு பஸ்சை கோர்ட்டு பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.

இதனால் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story