தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: மதுரையில் தயார் நிலையில் மீட்பு குழுவினர் - கலெக்டர் தகவல்


தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: மதுரையில் தயார் நிலையில் மீட்பு குழுவினர் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2018 4:15 AM IST (Updated: 6 Oct 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் நடராஜன் கூறினார்.

மதுரை,

மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மிக பலத்த மழையை எதிர்கொள்ளும் வகையில் மதுரை மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள 11 துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர். இதே போல் மாவட்டத்தில் 24 இடங்கள் வெள்ள பாதிப்பு இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

மேலும் 33 ஆரம்ப எச்சரிக்கை குழுக்கள், 33 இயற்கை இடர்பாடுகள்– நிவாரணம் மற்றும் மீட்புக்குழுக்கள், 33 இயற்கை இடர்பாடுகள் மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல் 417 முதல் செயல்பாட்டாளர்கள், 64 எந்நேரமும் செயல்படக்கூடிய நபர்கள், 11 பாம்பு பிடிப்பவர்கள் போன்றவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்பில் சிக்கி, மீட்கப்படும் மக்களை தங்க வைக்க 192 இடங்களும், கால்நடைகளை தங்க வைக்க 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 1077 என்ற அவசர கால தொலை பேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பேரிடர் மீட்புக்குழு நாளை(அதாவது இன்று) மதுரைக்கு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் கண்மாய்களுக்கு செல்லும் வரத்துக்கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் மழை நீர் கண்மாய்களுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 5–ந்தேதி (நேற்று) வரை 502.92 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story