தபால் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்துவோரின் இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலை; பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை


தபால் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்துவோரின்  இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலை; பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2018 4:09 AM IST (Updated: 6 Oct 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் தபால் அலுவலகங்கள் மூலம் மின் கட்டணம் செலுத்துவோரின் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலை உள்ளதால் மின் வாரியம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

தமிழ்நாடு மின் வாரியம் வீட்டு மின் இணைப்புகளுக்கும், வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளுக்கும் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த மின் கட்டணத்தை மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று நேரடியாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும், தபால் அலுவலகங்கள் மற்றும் பட்டியல் இடப்பட்ட இணைய தள நிறுவனங்கள் மூலமும் மின் கட்டணம் செலுத்த மின் வாரிய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது தவிர மின் நுகர்வோர் ஆன்–லைன் மூலமும் மின் கட்டணத்தை செலுத்த வாய்ப்புள்ளது.

பெரும்பாலானோர் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் மின் கட்டணத்தை செலுத்துவதை நடைமுறையாக கொண்டுள்ளனர். தபால் அலுவலகங்களும் இணைய தளம் மூலம் ஆன்–லைனில் மின் கட்டணத்தை செலுத்த ஏற்பாடு செய்கிறது. இதற்கான ரசீது சேவைக்கட்டணத்துடன் தபால் அலுவலகம் வழங்குகிறது. ஆன்–லைனின் மின் கட்டணம் செலுத்தப்படும் போது மின் கட்டணம் செலுத்திய மறு நிமிடமே கட்டணம் மின் வாரிய கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் தபால் அலுவலகம் மூலம் மின் கட்டணம் செலுத்தப்பட்டால் மின் கட்டணம் செலுத்திய 10 தினங்களுக்கு பின்னரும் மின் வாரிய கணக்கில் கட்டணம் வரவு வைக்கப்படாத நிலை உள்ளது.

இதனால் தபால் அலுவலகம் மூலம் மின் கட்டணம் செலுத்துவோரின் மின் இணைப்பை துண்டிக்க மின் வாரிய ஊழியர்கள் வீடு தேடி வரும் நிலை உள்ளது. அவர்களிடம் தபால் அலுவலகம் மூலம் மின் கட்டணம் செலுத்தியதை கூறினாலும் உடனடியாக அதற்கான ஆதாரத்தை கேட்கிறார்கள். ஆதாரத்தை காட்ட வேண்டியது நியாயம் என்றாலும் மின் கட்டணம் செலுத்திய 10 தினங்களில் அதற்கான ரசீது தொலைந்து இருந்தால் ஆதாரத்தை காட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மின் இணைப்பை துண்டிப்பை தவிர்க்க அபராதத்துடன் மின் வாரிய அலுவலகத்தில் உடனடியாக மீண்டும் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இப்பிரச்சினை குறித்து மின்வாரிய என்ஜினீயர் அகிலாண்டீஸ்வரியிடம் கேட்ட போது, “தபால் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தப்படும் போது இணையதள பிரச்சினையால் சில நேரங்களில் 1 மாதம் வரை கூட மின்வாரிய கணக்கில் கட்டணம் வரவு செய்யப்படாமல் உள்ளது. இப்பிரச்சினை குறித்து மின் வாரிய நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தியவர்கள் அதற்கான ஆதாரத்தை காட்டினால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும்.“ என்றார்.

மின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தபால் அலுவலகங்களில் குறித்த காலக்கெடுவுக்குள் மின் கட்டணத்தை செலுத்துவோருக்கும் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற தேவையில்லாத பிரச்சினை ஏற்படுவதால் மின்வாரிய நிர்வாகம் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என கோரப்பட்டுள்ளது. உடனடி தீர்வு கிடைக்காத பட்சத்தில் தபால் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story