வாலாந்தரவை ஊராட்சி தெற்குக்காட்டூர் பகுதியில் எரிவாயு குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு


வாலாந்தரவை ஊராட்சி தெற்குக்காட்டூர் பகுதியில் எரிவாயு குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 Oct 2018 4:45 AM IST (Updated: 6 Oct 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

வாலாந்தரவை ஊராட்சி தெற்குக்காட்டூர் பகுதியில் எரிவாயு குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம், தனியாருக்கு சொந்தமான மின் நிலையம், மத்திய அரசின் எரிவாயு நிறுவனம் என பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் விவசாய நிலங்களை அழித்து எரிவாயு குழாய்களை கொண்டு செல்வதாகவும், இதனால் விவசாய நிலங்கள் மற்றும் தென்னை மரங்கள் அழிந்து வருகிறது என்றும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவ்வப்போது எரிவாயு குழாய்கள் வெடித்து ஆபத்தான நிலை ஏற்படுவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதற்கு தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் தெற்குக்காட்டூர் பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் பணிக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் சுமார் 14 ஏக்கர் நிலத்தை வாங்கிஉள்ளது. இதில் இயற்கை எரிவாயு பம்பிங் ஸ்டே‌ஷன் அமைக்க ஏற்பாடு செய்து அதற்கான பூமி பூஜை நடத்த ஆயில் நிறுவனம் முயற்சி மேற்கொண்டது.

இதை அறிந்த வழுதூர், தெற்குக்காட்டூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன், துணை தாசில்தார் சரவணன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் மண்டபம் யூனியன் முன்னாள் தலைவர் முனியசாமி, கிராம தலைவர்கள் சவுந்திரராஜன், சிவசாமி, முன்னாள் கவுன்சிலர் தனபாலன், வாலாந்தரவை ஜெயபால், வழுதூர் ராஜா, கோபால், மூர்த்தி, வக்கீல்கள் ஸ்ரீகாந்த், பிரவின்குமார் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடத்திய பின்பு தான் இப்பகுதியில் மற்ற பணிகளை தொடங்க வேண்டும். ஏற்கனவே நிலத்தடி நீர், தென்னை மரங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் பணிகளை தொடங்கினால் குடும்ப அட்டைகள், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு தரப்பு ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு கிராமத்தை காலி செய்யப்போவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கிராம பிரமுகர்கள் கூறியதாவது:– வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர் மற்றும் தெற்குக்காட்டூர் கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கெயில் நிறுவனம், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு இருக்கும் பகுதியை கண்டறிந்து பூமிக்கடியில் குழாய்கள் பதித்து அதன் மூலம் தெற்குக்காட்டூரில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட எரிவாயு அங்கேயே சுத்திகரிக்கப்பட்ட பின்னர் அருகில் உள்ள கெயில் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள நிறுவனங்களில் இருந்து எழும் சத்தத்தால் கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் கிராம மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

இப்பகுதியில் எரிவாயு குழாய் பலமுறை சேதமடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்குக்காட்டூரை சேர்ந்த சேதுராமன் என்பவரது மனைவி ஆறுமுகம் என்பவர் தோட்டத்தில் எரிவாயு குழாய் வெடித்து வெளியேறுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எரிவாயு கசிவை உடனடியாக நிறுத்தாமல் காலம் தாழ்த்தியதால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் அவதிப்பட்டனர்.

எனவே கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கிராமத்தின் வழியாக செல்லும் எரிவாயு குழாய்களை முற்றிலும் அகற்றவேண்டும். புதிதாக இப்பகுதியில் குழாய்கள் பதிக்கக்கூடாது என்று பலமுறை வலியுறுத்தியுள்ளோம். ஆனாலும் மக்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கிருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தென்னை உள்ளிட்ட விவசாய நிலங்கள் முற்றிலும் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனங்களால் அதிகளவில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே பொதுமக்களின் கோரிக்கைகளை அரசும், அதிகாரிகளும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story