திருப்புவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் பாஸ்கரன் தகவல்
திருப்புவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். சிவகங்கை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.
விழாவில் தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியதாவது:– தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் அரசின் திட்டங்களை முனைப்புடனும் செய்து வருகிறது. அரசு திட்டங்கள் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்துடன் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு தற்போது நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளதால் விவசாயிகளுக்காக கடந்த வாரத்திற்கு முன்பு வைகையணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு அந்த தண்ணீர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்பட்டு வருகிறது.
அதேபோல் பெரியார் பாசன கண்மாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டு அதை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக தமிழக முதல்அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். இது தவிர திருப்புவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
அதேபோல் இந்த பகுதியில் அதிக மக்கள் தொகை வசித்து வருவதால் அவர்களின் தேவைக்கேற்ப அரசு மருத்துவமனை அமைத்து அதில் கூடுதலாக 5மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கூட்டத்தில் மொத்தம் 258 பயனாளிக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஜாஹாங்கீர், தாசில்தார் பாலகிருஷ்ணன், துணை தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.