விவசாய கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யவில்லை - குமாரசாமி


விவசாய கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யவில்லை - குமாரசாமி
x
தினத்தந்தி 6 Oct 2018 5:30 AM IST (Updated: 6 Oct 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

விவசாய கடன் தள்ளுபடிக்கு விண்ணபிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யவில்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடியின் பயனை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்திருப்பதாக தவறான தகவல் பரவி வருகிறது. இது வெறும் வதந்தி யாரும் நம்ப வேண்டாம். விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. அதனால் விவசாயிகள் பீதியடைய தேவை இல்லை.

கடனில் சிக்கி தவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற தனியாரிடம் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. அதற்கு மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளோம். அதனால் விவசாயிகள் யாரும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம்.

விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதில் வெற்றி பெறுவோம். கடன் தள்ளுபடி விஷயத்தில் வெளியாகும் தவறான தகவல்களை விவசாயிகள் நம்பக் கூடாது. விவசாயிகள் சரியான தகவல்களை வழங்கினால், அதன் அடிப்படையில் கடன் தொகையை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் இடைத்தரகர்கள் பயன் அடைவது தடுக்கப்படும்.

தனியார் கடன் தள்ளுபடிக்கான சட்ட மசோதாவில் 2 சந்தேகங்களை மத்திய அரசு கேட்டது. அவற்றுக்கு நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். இந்த சட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும். கடன் தள்ளுபடியின் பயனை விவசாயிகள் முழுமையாக பெற வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இந்த சந்திப்பின்போது, தேவேகவுடா, பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story