அரசு அதிகாரிகள் 2 பேர் வீடு, அலுவலகங்களில் 9 கிலோ தங்கம், ரூ.5¼ கோடி ரொக்கம் சிக்கின


அரசு அதிகாரிகள் 2 பேர் வீடு, அலுவலகங்களில் 9 கிலோ தங்கம், ரூ.5¼ கோடி ரொக்கம் சிக்கின
x
தினத்தந்தி 6 Oct 2018 5:48 AM IST (Updated: 6 Oct 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அரசு அதிகாரிகள் 2 பேரின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது 9 கிலோ தங்கம், ரூ.5¼ கோடி ரொக்கம் ஆகியவை சிக்கின.

பெங்களூரு,

வருமானத்திற்கு அதிகமாக 2 அதிகாரிகளும் பல கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தின் தலைமை அதிகாரியாக இருந்து வருபவர் டி.ஆர்.சுவாமி. இதுபோல, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் என்ஜினீயராக பணியாற்றி வருபவர் கவுடய்யா. இவர்கள் 2 பேரும் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, ஊழல் தடுப்பு படை போலீஸ் ஐ.ஜி. சந்திரசேகர் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் தலைமை அதிகாரியான டி.ஆர்.சுவாமிக்கு சொந்தமான பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அவரது அலுவலகம் மற்றும் உறவினர் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அதுபோல, பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் என்ஜினீயரான கவுடய்யாவுக்கு சொந்தமான பசவேசுவராநகரில் உள்ள வீட்டிலும், அவருடைய நண்பர்கள் மற்றும் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள கவுடய்யாவின் சகோதரர் ராமலிங்கே கவுடாவுக்கு சொந்தமான வீட்டிலும் நேற்று காலையில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்கள் உள்பட 8 இடங்களில் காலை 6 மணியில் இருந்து இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலை 6 மணியளவில் மல்லேசுவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது தளத்தில் வசிக்கும் டி.ஆர்.சுவாமியின் வீட்டிற்கு ஊழல் தடுப்பு படை போலீசார் சென்றனர். பின்னர் ஊழல் தடுப்பு படை போலீசார் வந்திருப்பதாகவும், கதவை திறக்கும்படியும் அதிகாரி டி.ஆர்.சுவாமியிடம் கூறினார்கள். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. காலை 6.45 மணி வரை அவர் கதவை திறக்காமல் இருந்தார். இதையடுத்து, அவரது வீட்டுக்கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் சிக்கின. அவற்றில் செல்லாத பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் வெளிநாட்டு பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் டி.ஆர்.சுவாமி வீட்டின் குளியலறையில் பதுக்கி வைத்திருந்த நகை, பணத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

இதுதவிர அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தும் இடத்தில் அதிகாரி டி.ஆர்.சுவாமிக்கு சொந்தமான 3 சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ஒரு காரின் மதிப்பு ரூ.35 லட்சம் இருக்கும் என்று தெரியவந்தது. அதே நேரத்தில் ஒரு சொகுசு காரில் சில சொத்து பத்திரங்கள், ஆவணங்கள் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் டி.ஆர்.சுவாமியின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்களும் போலீசார் கைக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது வீட்டில் சிக்கிய பணம், 3 பணம் எண்ணும் எந்திரங்கள் மூலமாக எண்ணப்பட்டன. டி.ஆர்.சுவாமியின் வீட்டில் இருந்து மொத்தம் ரூ.4½ கோடி ரொக்கம் மற்றும் 1½ கிலோ எடையிலான தங்க நகைகள் சிக்கி உள்ளன.

இதுபோன்று, பசவேசுவராநகரில் உள்ள என்ஜினீயர் கவுடய்யா வீட்டில் நடத்திய சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து ரூ.75 லட்சம், 3 கிேலா எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்கள், அவரது உறவினர் வீட்டில் இருந்து 4½ கிலோ தங்க நகைகள் சிக்கின. மேலும் அவர் பினாமி பெயரில் அசையும், அசையா சொத்துக்கள் வாங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அவரது வீட்டில் இருந்து சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் ஊழல் தடுப்பு படை போலீசார் கைப்பற்றி எடுத்துச்சென்றனர். என்ஜினீயர் கவுடய்யா தனது சகோதரர் ராமலிங்கே கவுடா பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதுடன், சொகுசு கார்கள் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

சோதனைக்கு உள்ளான அதிகாரி டி.ஆர்.சுவாமி, கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தின் தலைமை என்ஜினீயராக இருந்ததால், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவற்றுக்காக தொழிற்சாலையின் உரிமையாளர்களிடம் கமிஷன் பெற்று வந்ததாகவும், அதன்மூலம் அவர் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து சொத்துகள் குவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஊழல் தடுப்பு படை போலீசார் நடத்திய சோதனையில் அதிகாரிகள் டி.ஆர்.சுவாமி மற்றும் கவுடய்யா தங்களது வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஊழல் தடுப்பு படை போலீஸ் ஐ.ஜி. சந்திரசேகர் கூறுகையில், "அதிகாரிகள் டி.ஆர்.சுவாமி, கவுடய்யா ஆகிய 2 பேரின் வீடு, அலுவலகங்கள் உள்பட 8 இடங்களில் சோதனை நடந்துள்ளது. பெங்களூருவில் உள்ள 7 இடங்களிலும், துமகூருவில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இவர்களில் டி.ஆர்.சுவாமி வீட்டில் இருந்து மட்டும் ரூ.4½ கோடி ரொக்கம், 1½ கிலோ தங்க நகைகள், 3 சொகுசு கார்கள் சிக்கியது. இதுதவிர டி.ஆர்.சுவாமி, அவரது குடும்பத்தினர் பெயரில் 8 வீடுகள், 10 வீட்டுமனைகள், 10 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதுபோல, அதிகாரி கவுடய்யா மற்றும் உறவினர் வீடுகளில் இருந்து ரூ.75 லட்சம், 7½ கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், 3 கார்கள் சிக்கியது. மேலும் அவருக்கு 2 வீடுகள், 8 வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் பிளாட்டுகள் இருப்பதுடன், வங்கியில் ரூ.30 லட்சம் இருப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது" என்றார்.

இந்த சோதனை தொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் அதிகாரிகள் டி.ஆர்.சுவாமி மற்றும் கவுடய்யா மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும் 2 அதிகாரிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாரிகள் வீடுகளில் ரூ.5¼ கோடி ரொக்கம், 9 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story