சுரண்டையில் புத்தக திருவிழா தொடங்கியது 14–ந் தேதி வரை நடக்கிறது


சுரண்டையில் புத்தக திருவிழா தொடங்கியது 14–ந் தேதி வரை நடக்கிறது
x
தினத்தந்தி 6 Oct 2018 9:45 PM GMT (Updated: 6 Oct 2018 12:46 PM GMT)

சுரண்டையில் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 14–ந் தேதி வரை நடக்கிறது.

சுரண்டை, 

சுரண்டையில் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 14–ந் தேதி வரை நடக்கிறது.

புத்தக திருவிழா

பொது நல மன்றம் மற்றும் சமூக நல இயக்கங்கள் சார்பில் 2–ம் ஆண்டு புத்தக திருவிழா சுரண்டை காமராஜர் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி நாட்டாண்மை தங்கையா நாடார் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.

‘தினத்தந்தி‘ பதிப்பகத்தின் முதல் விற்பனையை சுரண்டை நகர வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ் தொடங்கி வைத்தார். முதல் புத்தகத்தை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் பெற்றுக் கொண்டார்.

விழிப்புணர்வு பேரணி

முன்னதாக சுரண்டை மற்றும் சுற்றுப்புற பள்ளிகளைச் சேர்ந்த 600–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளின் புத்தகம் வாசிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை சுரண்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ–மாணவிகளின் புத்தகம் வாசித்தல் நிகழ்ச்சி, பேச்சு போட்டி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், சுந்தரேசபுரம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரசூல் அகமது இப்ராகிம், சுரண்டை ஜவகர்லால் நடுநிலைப்பள்ளி தாளாளர் ஜேபஸ் பொன்னையா, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், ரத்தினசாமி, சண்முகவேல், ஆறுமுகா ஐ.ஏ.எஸ். அகாடமி தலைவர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

14–ந் தேதி வரை...

இந்த புத்தக திருவிழா தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை நடக்கிறது. அனுமதி இலவசம். நுழைவு கட்டணம் கிடையாது. புத்தக திருவிழாவில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரூ.1 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக திருவிழா வருகிற 14–ந் தேதி வரை நடக்கிறது. புத்தக திருவிழாவில் தினமும் மாலை 5 மணிக்கு மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இலக்கிய உரை, பாராட்டு விழா, சிறப்புரை உள்ளிட்டவைகள் நடக்கிறது. மேலும் ரூ.200–க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் தினமும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தினத்தந்தி அரங்கு

புத்தக திருவிழாவில் 6–வது அரங்காக தினத்தந்தி அரங்கு உள்ளது. இந்த அரங்கத்தில் தினத்தந்தி பதிப்பகத்தின் வரலாற்று சுவடுகள், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சாதனை சரித்திரம், தமிழ் சினிமா வரலாறு, ஆயிரம் ஆண்டு அதிசயம், ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு, புதையல் ரகசியம், மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள், சினிமாவின் மறுபக்கம், பரபரப்பான வழக்குகள், நம்ப முடியாத உண்மைகள், ஆளுமைத்திறன்,

அதிசயங்களின் ரகசியம், இதயம் தொட்ட பழமொழிகள், பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம், ஆதிச்சநல்லூர்–கீழடி மண்மூடிய மகத்தான நாகரிகம், ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள், 23 தோ‌ஷங்கள் பரிகார ஆலயங்கள், வாருங்கள் சீரடி சாய்பாபாவை தரிசிப்போம், 27 நட்சத்திரங்கள் பரிகார முறைகள், உலக நாயகன் கமல்ஹாசன், சிகரம் தொடும் சிந்தனைகள் உள்ளிட்ட 40–க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த புத்தகங்களை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.


Next Story