குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தென்காசி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தென்காசி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Oct 2018 3:15 AM IST (Updated: 6 Oct 2018 7:27 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து தென்காசி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தென்காசி,

குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து தென்காசி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் தென்காசி நகர சபையில் மக்கும் குப்பைகள் மூலமாக உரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் ஒரு இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்தில் அதற்கான ஏற்பாடுகளை கடந்த 3–ந் தேதி செய்து வந்தனர். இதனை அறிந்த தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வருகிற 6–ந் தேதி (அதாவது நேற்று) நகர சபை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே நேற்று தென்காசி நகர சபை அலுவலகத்தில் திட்ட விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு நகர சபை ஆணையாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், உதவி பொறியாளர் ஜெய பிரியா மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முற்றுகை

கூட்டத்தில் உரம் எடுக்கும் திட்டம் குறித்து விரிவாக கூறப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை சேமித்தால் நோய் பரவும் என்றும், இதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உறுதியாக கூறினர். பின்னர் அவர்கள் நகர சபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story