திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா 10–ந் தேதி தொடங்குகிறது: சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி


திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா 10–ந் தேதி தொடங்குகிறது: சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Oct 2018 4:00 AM IST (Updated: 6 Oct 2018 8:20 PM IST)
t-max-icont-min-icon

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இருமாநில போலீசார் பங்கேற்றனர்.

சுசீந்திரம்,

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா வருகிற 10–ந் தேதி தொடங்குகிறது.

அதனை முன்னிட்டு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை  8.25 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் கோவிலில் இருந்து வெளியே எழுந்தருளிய போது  தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுத்து நின்று இசை வாத்தியங்கள் முழங்க துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.  

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மேல்சபை எம்.பி.யும் நடிகருமான சுரேஷ்கோபி, நாகர்கோவில் கோட்டாட்சியர் வீராசாமி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ. அசோகன்,  இணை ஆணையர் அன்புமணி மற்றும் நவராத்திரி குழு தலைவர் வீரபத்திரபிள்ளை, ஊர் தலைவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

அதன் பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பாக திருக்கண் சாத்தி வழிபாடு நடந்தது. தொடர்ந்து நான்கு ரதவீதிகளிலும் அம்மன் வீதிஉலா வந்தார். அப்போது பக்தர்கள் தங்களின் வீடுகளின் முன்பு விளக்கேற்றியும், திருக்கண்சாத்தியும், மலர் தூவியும் அம்மனை வழிபட்டு வழியனுப்பினர்.

ஊர்வலத்தின் முன்பு பெண்கள் முத்துக்குடை ஏந்தியும், கையில் திருவிளக்கேற்றியும் சிவாச்சாரியார்கள் பாடல் பாடியும் தமிழக, கேரள போலீசாரின் இசை வாத்தியங்கள் முழங்க அம்மன் பத்மநாபபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டார். ஊர்வலம் ஆஸ்ராமம், நாகர்கோவில் கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக நேற்று இரவு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை சென்றடைந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உப்பரிகை மாளிகை மேல்மாடியில் உள்ள பூஜை அறையில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் பல்லக்கு வாகனத்திலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

ஊர்வலம் வருகிற 9–ந் தேதி இரவு திருவனந்தபுரம் சென்றடையும். அங்கு நவராத்திரி பூஜைகள் முடிந்த பின்பு மீண்டும் குமரி மாவட்டத்திற்கு சாமி சிலைகள் கொண்டு வரப்படும்.

Next Story