முதியவரிடம் காசோலை பறித்த வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மனைவி பரபரப்பு புகார்


முதியவரிடம் காசோலை பறித்த வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மனைவி பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 7 Oct 2018 4:15 AM IST (Updated: 7 Oct 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

முதியவரிடம் காசோலை பறித்த வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மனைவி பரபரப்பு புகார். பணம், நகையை அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுகிறார்.

சென்னை,

முதியவரிடம் மிரட்டி காசோலை பறித்த வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் மீது அவரது மனைவி ஸ்ரீஜா பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.

சென்னையில் முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் காசோலை பறித்த புகாரில் கட்டுப்பாட்டு அறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் மீது பீர்க்கன்கரணை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் தாம்சன் மீது சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் அவரது மனைவி ஸ்ரீஜா (வயது 42) சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

என்னுடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஆகும். அங்கு நான் வசித்து வந்த போது இன்ஸ்பெக்டர் தாம்சன் உறவினர் வீட்டுக்கு வந்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது. எங்கள் திருமணம் மார்த்தாண்டத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்தது.

எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் அன்பாக நடந்துக் கொண்ட தாம்சன் காலப்போக்கில் என்னை அடித்து துன்புறுத்தியும், கொடுமைப்படுத்தியும் வந்தார். கணவர் என்பதால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்.

அப்போது என்னிடம் ரூ.10 லட்சம், 65 பவுன் தங்கநகை வாங்கி கொண்டார். அதன்பிறகு கடந்த 2013-ம் ஆண்டு, என்னையும் எனது 10 வயது மகளையும் அடித்து துரத்திவிட்டார். தற்போது பல பெண்களுடன் சுற்றி திரிந்து வருகிறார்.

சேர்ந்து வாழலாம் என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வந்தார். என்னுடைய குழந்தையின் எதிர்காலம் கருதி இதனை விட்டுவிட்டேன். கடந்த ஒரு சில நாட்களாக தாம்சன் காசோலை மோசடி செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்ததை கண்டேன்.

இதுதொடர்பாக எனது கணவரும், இன்ஸ்பெக்டருமான தாம்சன் சிறை சென்று விட்டால், அவர் என்னிடம் வாங்கிய ரூ.10 லட்சம் பணம், 65 பவுன் தங்க நகை கிடைக்காமல் போய்விட்டால் எனது மகளின் வாழ்க்கை கேள்விக்குரியாகி விடும்.

கொலை மிரட்டல் விடுத்து வரும் தாம்சன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய பணம், நகையை மீட்டு தர வேண்டும். அவரிடம் இருந்து எனக்கும், எனது மகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story