டி.டி.வி.தினகரன் கனவு பலிக்காது; திருப்பரங்குன்றத்தில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


டி.டி.வி.தினகரன் கனவு பலிக்காது; திருப்பரங்குன்றத்தில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
தினத்தந்தி 7 Oct 2018 5:00 AM IST (Updated: 7 Oct 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றத்தில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். டி.டி.வி.தினகரனின் கனவு பலிக்காது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா ‘டூரிஸ்ட் டாக்சி ஓட்டுனர்’ தொழிலாளர் மற்றும் உரிமையாளர் தொழிற்சங்க தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. எனவே மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் 4 முறை ஆலோசனை நடத்தி தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டு உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னையில் ஒரு மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். இதே போல் அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மழையால் தேங்கும் நீரை உறிஞ்ச மோட்டார் பம்பு செட், மரங்கள் விழுந்தால் உடனடியாக அப் புறப்படுத்த மரம் அறுக்கும் எந்திரம், பொக்லைன் எந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை அதிகமாக பெய்யும் இடங்களை கண்டறிந்து பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன. அங்கு உணவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சர் ஆன போது நீங்கள் துணை முதல்–அமைச்சர் பதவி கேட்டதாக டி.டி.வி.தினகரன் கூறுகிறாரே?’ என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கும்போது, ‘டி.டி.வி. தினகரன் நிறைய காமெடி செய்கிறார். தினகரனை கட்சி யில் இருந்து விலக சொன்னது நானும், அமைச்சர் தங்கமணியும் தான்.

திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் 20 ரூபாய் நோட்டுகள் கொடுத்தது போல் திருப்பரங்குன்றத்தில் செல்லுபடியாகாது. அங்கு தினகரனின் கனவு பலிக்காது. எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் அண்ணன்–தம்பியாக இருக்கிறார்கள். தினகரன் 10 வருடங்களாக கட்சியில் இல்லை. அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. தினகரனுக்கு, ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக பதில் அளித்துள்ளார். தினகரன் பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை’ என்றார்.

‘துணை வேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியிருப்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டி உள்ளாரே?’ என கேட்டதற்கு அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

பின்னர் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டத்துக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நா. கருப்பசாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.அப்துல்ஜப்பார், வால்பாறை அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story