அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு


அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2018 4:30 AM IST (Updated: 7 Oct 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், முதன்மை செயலாளருமான சந்திரகாந்த் காம்ளே தலைமையில், மழையால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் குறித்த அவசர ஆலோசனை கூட்டம் ஊட்டி தமிழகம் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நீலகிரியில் மழையின் அளவு அதிகரித்தால், எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதன்மை செயலாளர் கேட்டறிந்தார்.

அதன்பிறகு முதன்மை செயலாளர் சந்திரகாந்த் காம்ளே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் அதிகமான மழை பெய்ய உள்ளதாகவும், ரெட் அலர்ட் அறிவித்தும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தமிழக முதல்–அமைச்சர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி இன்று (நேற்று) நீலகிரி மாவட்டத்துக்கு வந்து உள்ளேன். நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 233 இடங்கள் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளன. 35 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட பகுதிகளில் இந்த குழுக்கள் நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், மாவட்ட நிர்வாகத்துக்கு மற்ற துறைகளின் ஒத்துழைப்பு உடனடியாக கிடைக்கும் வகையில் நான் இங்கு வந்து இருக்கிறேன். 2 மாதத்துக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், ரே‌ஷன் பொருட்கள் இருப்பு உள்ளது. மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது. தற்போது கிரண்டப் காலனி, அம்மன்நகர் ஆகிய பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிவாரண மையம், உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மத்திய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் குன்னூரில் முகாமிட்டு உள்ளனர். நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 28 போலீசார் பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது மேகமூட்டம் அதிகமாக காணப்படுவதால், ஊட்டிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களை இயக்கி வருபவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது என்றார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, தம்பிதுரை, துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் காசிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story