வேலைதேடி வருபவர்களின் வசதிக்காக இடம் பெயர்வோர் ஆதரவு மையம் தொடங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


வேலைதேடி வருபவர்களின் வசதிக்காக இடம் பெயர்வோர் ஆதரவு மையம் தொடங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
தினத்தந்தி 7 Oct 2018 4:30 AM IST (Updated: 7 Oct 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

வேலைதேடி வருபவர்களின் வசதிக்காக இடம் பெயர்வோர் ஆதரவு மையம் திருப்பூரில் தொடங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

திருப்பூர்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுக்கான கருத்தரங்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் விழா நேற்று திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முதன்மை செயல் அதிகாரி பிரவீன் நாயர் வரவேற்று பேசினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 62 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களில் 99 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.44 ஆயிரத்து 756 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.3 ஆயிரத்து 576 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஊரக மக்களின் நலனுக்காகவும், வறுமை ஒழிப்புக்காகவும், செயல்திறன் மிக்க சமுதாய அமைப்பை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்துவதே ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் நோக்கமாகும். நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமரின் கனவு திட்டமான தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு ஆட்டோமொபைல், சுகாதாரம், தோல் பொருட்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப சேவை, சில்லரை வணிகம், ஆயத்த ஆடை வடிவமைப்பு, வங்கி நிதி சேவை மற்றும் காப்பீடு, அழகு கலை, விருந்தோம்பல், மின் மற்றும் மின்னணு சார்ந்த தொழில்கள், கட்டுமானம், பண்ணை உபகரணங்கள் பராமரித்தல், வெல்டிங், தொழிற்சாலைகளில் உற்பத்தி சார்ந்தவை, மாற்று எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கி அதற்கேற்ற பணிகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 21 ஆயிரத்து 341 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 16 ஆயிரத்து 323 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலை தேடி கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களை தொழில் நிறுவனங்களோடு ஒருங்கிணைத்தல், ஆலோசனை வழங்குதல், தங்கும் இடவசதி, 24 மணி நேர தகவல் பரிமாற்ற உதவி போன்ற சேவைகளை கொண்ட ஆதார மையமாக இடம் பெயர்வோர் ஆதரவு மையம் திருப்பூரில் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக கிராமப்புற ஏழை பெண்கள் 77 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அதுபோல் இந்த ஆண்டுக்கான கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் விரைவில் ஏழை குடும்பத்தினருக்கு கறவை பசுக்கள் வழங்கப்படும் என்றார்.

விழாவில் கிராமப்புற இளைஞர்கள் ஆயத்த ஆடை திறன் வளர்ப்பு பயிற்சி பெறும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஊரக வாழ்வாதார இயக்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருப்பூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 200 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனாக ரூ.5 கோடியே 58 லட்சமும், திருப்பூர் மாவட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 125 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆதார நிதி, வங்கிக்கடனாக ரூ.57½ லட்சமும் வழங்கப்பட்டது. தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

Next Story