இயற்கை சீற்றத்தை சமாளிக்க பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு


இயற்கை சீற்றத்தை சமாளிக்க பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் சரோஜா பேச்சு
x
தினத்தந்தி 7 Oct 2018 4:30 AM IST (Updated: 7 Oct 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை சீற்றத்தை சமாளிக்க மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ராசிபுரத்தில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் சரோஜா பேசினார்.

ராசிபுரம்,

ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தலைமை தாங்கினார். ராசிபுரம் தாசில்தார் சாகுல் அமீது, நகராட்சி ஆணையாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சரோஜா பேசியதாவது:-

இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏரிகள், குளம், குட்டைகள் மழை நீரால் நிரம்பினால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அந்தந்த பகுதி அலுவலர்கள் தகவல் களை தெரிவிக்க வேண்டும்.அதேபோல் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அவசர உதவி எண்ணிற்கோ, அல்லது அரசு அலுவலர்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அத்தகைய சூழலில் மக்களோடு ஒருங்கிணைந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

மேலும் பலத்த மழை பெய்தால் அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துங்கள். இயற்கை சீற்றத்தை சமாளிக்க பொது மக்கள் அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ரெட் அலர்ட் எனப்படும் கனமழை எச்சரிக்கையை கையாளுவதற்கு மட்டும் அல்லாமல் அடுத்த 2 மாத காலத்திற்கு மழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.

அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர் ஒருவர் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தார்.

அமைச்சரின் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர் ஒருவர் கேம் விளையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story