திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்: கோ சாலையில் வைக்கோல் தட்டுப்பாடா? - இணை ஆணையர் நேரில் ஆய்வு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்: கோ சாலையில் வைக்கோல் தட்டுப்பாடா? - இணை ஆணையர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2018 4:45 AM IST (Updated: 7 Oct 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கோசாலையில் வைக்கோல் தட்டுப்பாடு உள்ளதா? என்று இணை ஆணையர் ஞானசேகரன் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் 3-ம் பிரகாரத்தில் உள்ள கோசாலையில் 45 கால்நடைகள் கோவில் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள கால்நடைகளுக்கு கடந்த 2 நாட்களாக குறைந்த அளவு வைக்கோல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கால்நடைகள் போதுமான உணவின்றி தவித்து வருவதாகவும் புகார்கள் வந்தன.

இந்த நிலையில் நேற்று கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கோ சாலையில் ஆய்வு செய்தார். பின்னர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் பயிரிடப்பட்டு உள்ள பசுந்தீவனத்தையும் பார்வையிட்டார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கால்நடைகளுக்கு கால்நடை டாக்டரால் பரிந்துரைக்கப்பட்டபடி நாள்தோறும் காலை, மாலை 2 வேளைகளிலும் கடலை பொட்டு, உளுத்தம் நொய், பச்சரிசி தவிடு, கோதுமை தவிடு, மணிலா புண்ணாக்கு மற்றும் கம்பு, கேழ்வரகு, சோளமாவு கூழ் ஆகியவை கலந்த கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தீவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, நாள்தோறும் உரிய அளவின்படி அளிக்கப்படுகிறது.

கோவில் நிலத்தில் பண்ணை சாகுபடி செய்வதன் மூலம் பெறப்படும் வைக்கோல் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. பண்ணை சாகுபடி செய்வதன் மூலம் பெறப்படும் வைக்கோல் அனைத்தும் தனகோட்டிபுரம் பண்ணை நிலத்தில் இருப்பு வைக்கப்பட்டு, தேவைக்கேற்ப அங்கிருந்து கொண்டு வரப்பட்டு கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு கருதி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் கோவிலில் வைக்கோல் இருப்பு வைக்கப்படுவதில்லை. சுமார் 15 நாட்களுக்கு தேவையான வைக்கோலும், கோவில் பண்ணை நிலத்தில் சுமார் 6 மாதங்களுக்கு தேவையான வைக்கோலும் இருப்பில் உள்ளது.

மேலும் கோவில் 5-ம் பிரகாரத்தில் சுமார் 2 ஏக்கர் அளவில் கோவில் மூலம் பசுந்தீவனம் பயிரிடப்பட்டு, கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது. கோசாலை பராமரிப்பு பணியில் தினமும் 5 கோவில் பணியாளர்களும், ‘அவுட்சோர்சிங்’ பணியாளர்கள் 2 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.

கால்நடைகள் வாரந்தோறும் கால்நடை டாக்டரால் பரிசோதனை செய்யப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகள் மூலம் பெறப்படும் பால் கோவிலில் சாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கால்நடைகள் பட்டினியாக உள்ளது என்று கோவிலின் பெயரை கெடுக்கும் வகையில் சிலர் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று அவர் கூறினார்.


Next Story