தேவேந்திரகுல வேளாளர்களை மிகபிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி தொடர் போராட்டம்


தேவேந்திரகுல வேளாளர்களை மிகபிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2018 4:15 AM IST (Updated: 7 Oct 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி மிகபிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி மாநாடு நேற்று இரவு திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் நடந்தது. மாநாட்டுக்கு மாநில இளைஞர் அணி தலைவர் ஷியாம் தலைமை தாங்கினார். கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ம.அய்யப்பன் வரவேற்று பேசினார்.

மாநாட்டில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றி மிகபிற்பட்டோர் பட்டியலில் மத்திய-மாநில அரசுகள் சேர்க்க வேண்டும். அதை போராடித்தான் பெறவேண்டும் என்றால் அதற்கும் தயார். தேவேந்திரகுல வேளாளர்கள் வேளாண்குடி, உயர்குடி, உழவன்குடி என நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டும். அதனால், வரும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் நடத்துவது சுயமரியாதைக்கான போராட்டம். இந்த சமுதாயத்திற்கு இளைஞர்கள்தான் தலைமை ஏற்க வேண்டும்.

நமக்கு பொறுமை, கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு தன்மை அவசியம். தமிழகத்தில் நமக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் ஆட்சியை தீர்மானிப்பவர்களாக இருப்போம். திருச்சி மாவட்டத்தில் துறையூர் தொகுதியை வென்றாக வேண்டும். நாம் ஒரு தமிழ் சமுதாயமாக, இந்திய சமுதாயமாக, வேறுபட்ட சமுதாயமாக இருக்க வேண்டும் என்றால் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற வேண்டும். இது அரசியல் மாநாடு அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

இளைஞர் அணி மாநில தலைவர் ஷியாம் பேசுகையில், “பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி மிகபிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை என்றால் பழைய போராட்ட குணங்களை மீண்டும் வெளிப்படுத்த நேரிடும்” என்றார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஆங்கிலேயர் காலத்தில் இழைக்கப்பட்ட தவறே தேவேந்திரகுல வேளாளர்களின் ஒட்டுமொத்த பின்னடைவிற்கும் காரணம். பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டதால் பிரிட்டிஷ் அரசிடம் நஷ்டஈடு கேட்டு நவம்பர் 15-ந் தேதி சென்னை பிரிட்டிஷ் ஹை கவுன்சில் அலுவலகம் நோக்கி பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்துவது. ஜனவரி(2019) 6-ந் தேதி முதல் இளைஞர் அணி சார்பில் தமிழகமெங்கும் சாலை மறியல் போராட்டம் நடத்துவதுடன், தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி, மிகபிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்துவது.

திராவிட சித்தாந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் குடும்ப ஆட்சிமுறைகளை ஒழித்து மரபுவழி தமிழர் ஆட்சியை நிறுவ இயலும். எனவே, ‘அடையாள மீட்பே அரசியல் அதிகார மீட்பு’ என்ற லட்சியத்தை அடைய ஒன்றியத்திற்கு 100, மாவட்டத்திற்கு 1000 என புதிய தமிழகம் இளைஞர்கள் கிராமந்தோறும் களப்பணியாற்றுவது. மேற்கண்டவை உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கூத்தூர் பாலு, துணை செயலாளர் நம்பிராஜ், கொள்கை பரப்பு செயலாளர் வாழையூர் குணா, மண்ணை ஒன்றிய செயலாளர் தினகரன், லால்குடி ஒன்றிய செயலாளர் வினோத்குமார் மற்றும் வடவூர் சண்முகம், தென்னூர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story