ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி போட்டியா? தேவேகவுடா பதில்


ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி போட்டியா? தேவேகவுடா பதில்
x
தினத்தந்தி 7 Oct 2018 5:49 AM IST (Updated: 7 Oct 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி போட்டியா? என்பது குறித்து தேவேகவுடா பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராமநகர், ஜமகண்டி தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

ராமநகர் தொகுதியில் குமாரசாமியின் மனைவி அனிதா, ஜனதாதளம்(எஸ்) கட்சி ேவட்பாளராக களம் காண முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. ராமநகர் தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். அனிதா குமாரசாமியை ராமநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ராமநகர் தொகுதி மக்கள், அனிதா குமாரசாமியை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருவது உண்மை தான். மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து குமாரசாமி, சித்தராமையா, பரமேஸ்வர்ஆகியோர் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லாமல் இடைத்தேர்தலை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் பிரசாரம் செய்வது குறித்து நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story