தண்ணீர் ‘தேவதை’
நடிகை, நடன மங்கை, மாடல் அழகி, சமூக ஆர்வலர் என பல பரிமாணங்களை கொண்டவர், ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே.
நடிகை, நடன மங்கை, மாடல் அழகி, சமூக ஆர்வலர் என பல பரிமாணங்களை கொண்டவர், ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே. இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நிலவிய தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அந்த கிராமத்தில் கழிப்பறை வசதியும் இல்லாமல் இருந்திருக்கிறது. இவருடைய முயற்சியால் கிராம மக்கள் தாங்களாகவே கட்டுமான பணிகளை மேற்கொண்டு கழிப்பறை வசதிகளை அமைத்துவிட்டார்கள். அந்த கிராமத்தின் பெயர் பந்த்ரி. அங்கு இரண்டாயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.
‘‘மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியின் பாதிப்பு மிக அதிகம். பந்த்ரி கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் வீட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைத்திருந்தார்கள். ஆனால் நிலத்தடி நீர் இல்லை. நான் தற்காலிக ஏற்பாடாக தண்ணீர் டேங்கர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்து கொடுத்தேன். மழைநீர் சேகரிப்பு ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு என்பதை மக்களிடம் விளக்கினேன். அவர்கள் அதனை புரிந்துகொண்டார்கள்.
என் முன்னோர்கள் விவசாயிகளாக இருந்தார்கள். எனது தந்தை அரசு ஊழியராக இருந்தார். ஆனாலும் விவசாய பணிகளிலும் கவனம் செலுத்தினார். அதனால் எனக்கும் விவசாயம் சார்ந்த அத்தனை விஷயங்களும் தெரியும். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எங்களால் விவசாயத்தை தொடர முடியவில்லை. விவசாய நிலத்தை விற்றுவிட்டு அவுரங்காபாத்துக்கு இடம்பெயர்ந்து வந்தோம். வறட்சியால் விவசாயிகள் எத்தகைய வேதனைகளை அனுபவிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்’’ என்கிறார், ராஜ்ஸ்ரீ.
இவரது முயற்சியால் இப்போது அந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. மழைநீர் சேகரிப்பால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையில் இருந்தும் மீண்டுவிட்டார்கள். அந்த கிராமத்தில் கழிவறைகள் இல்லாமல் இருந்ததற்கு, ‘கழிவறை கட்டினால் நிறைய தண்ணீர் செலவழிக்கவேண்டும்’ என்ற எண்ணமே காரணமாக இருந்திருக்கிறது. அத்துடன் வீட்டில் கழிவறை கட்டுவதற்கு அரசு 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் தகவலும் அங்குள்ளவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. அதுபற்றி ராஜ்ஸ்ரீ விளக்கி கூறி அவர்களையே சுயமாக கட்டுமான பணியில் ஈடுபடவைத்துவிட்டார். அவர்கள் சித்தாளாக வேலை பார்த்து கழிவறைகளை கட்டிவிட்டார்கள். கழிவறையுடன் மழை நீர் சேமிக்கும் கட்டமைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார். அங்குள்ள பெண்கள் மாதவிடாய் காலத்தில் நாப்கின் பயன்படுத்தவும், வீட்டில் இருந்தே கைவினை தொழில் கற்று சம்பாதிக்கவும் ராஜ்ஸ்ரீ வழிகாட்டியாக விளங்கிக்கொண்டிருக்கிறார். தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி மற்ற பகுதிகளிலும் சமூக சேவை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story