கடம்பூரில் மழை: ரெயில்வே கேட் சுரங்க பாதையில் தேங்கி கிடக்கும் தண்ணீர் அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்
கடம்பூர் பகுதியில் பெய்த மழை காரணமாக, கோடாங்காலில் உள்ள ரெயில்வே கேட் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.
கயத்தாறு,
கடம்பூர் நகரப்பஞ்சாயத்தை சேர்ந்த கோடாங்கால் கிராமத்துக்கு மேல்புறம் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் கடந்த 60 ஆண்டுகாலமாக திறந்தவெளி கேட்டாக இருந்து வந்தது. இந்த கேட் வழியாக 2-வது ரெயில்வே தண்டவாளம் அமைப்பதற்காக இங்கு சுரங்க பாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த 6 மாதங்களாக அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் ரெயில்வே தண்டவாளத்துக்கு இருபுறமும் தண்ணீர் நிற்கும் நிலையில் குளம் மற்றும் வாறுகால் உள்ளது. ஆகவே இங்கு சுரங்க பாதை அமைக்காமல், மேம்பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி கோடாங்கால் கிராம மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ரெயில்வே கேட் சுரங்க பாதை 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் பெய்த மழையால், சுரங்க பாதையில் 4 அடி முதல் 6 அடி வரை தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அதன் வழியாக ஆட்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்துக்கு சென்றனர்.
இதனை அறிந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அப்பகுதிக்கு விரைந்து வந்து, ரெயில்வே சுரங்க பாதையை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள், சுரங்க பாதை அமைக்கும் பணி நடந்து வந்ததால் அதன் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட ரெயில்வே பாதையை நிரந்தர பாதையாக மாற்றி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, ரெயில்வே துறை பொது மேலாளரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் மாவட்ட கலெக்டர் மூலம் அந்த தற்காலிக பாதை, நிரந்தர பாதையாக மாற்றப்படும் என்றார். பின்னர் தற்போது அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதையில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்ற அறிவுறுத்தினார். அதன்படி தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது.
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், மண்டல துணைத்தாசில்தார் பாஸ்கரன், கடம்பூர் நகரபஞ்சாயத்து நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கட்சி நிர்வாகிகள் வினோபாஜ், முருகேசன், உள்பட வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story