திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பஸ்சை மீட்பதில் சிக்கல் போக்குவரத்து பாதிப்பு; வாகன ஓட்டிகள் கடும் அவதி
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பஸ்சை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தாளவாடி,
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஈரோட்டுக்கு 24 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் உள்ள 26–வது கொண்டை ஊசி வளைவில் கடந்த 5–ந் தேதி இரவு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக 200 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஈரோட்டை சேர்ந்த முத்து மற்றும் குருசாமி ஆகிய 2 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் சத்தியமங்கலம் மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கடும் பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் மழை பெய்ததால் மலைப்பகுதியில் கவிழ்ந்த பஸ்சை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. நேற்று வெயில் அடித்ததால் பஸ்சை மீட்க ஆசனூர் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளத்தில் விழுந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் மீட்கும் பணி நேற்று மதியம் 12 மணி அளவில் தொடங்கியது. இதன்காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நின்றன. மேலும் தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
மலைப்பாதையில் கவிழ்ந்த பஸ்சை சுமார் 7 மணி நேரம் போராடியும் மீட்டு மேலே கொண்டு வர முடியவில்லை. இதைத்தொடர்ந்து பஸ்சை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து வாகன ஓட்டிகளிடம் போலீசார் பேசி சமாதானப்படுத்தினார்கள். அதன்பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் பண்ணாரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.