2–வது முறையாக 60 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்


2–வது முறையாக 60 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2018 11:00 PM GMT (Updated: 7 Oct 2018 7:32 PM GMT)

தொடர்மழை காரணமாக 2–வது முறையாக வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை, மதுரை, தேனி, திண்டுக்கல் சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்ட விவசாயத்திற்கு முக்கிய நீர்ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு வைகை அணை முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தேனி மாவட்டத்திலும் கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை முழுகொள்ளளவான 69 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

அதன் பின்னர் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த வாரம் வைகை அணையின் நீர்மட்டம் 55 அடியாக குறைந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, போடி, கம்பம், சுருளி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், வைகை, கொட்டக்குடி, சுருளி போன்ற ஆறுகளில் நீர்வரத்து கிடு, கிடுவென அதிகரித்தது. இதனையடுத்து வைகை அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்தது.

இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு 2–வது முறையாக 60 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து கொண்டே வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 60.47 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,190 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 3 ஆயிரத்து 692 மில்லியன் கனஅடியாக காணப்பட்டது.


Next Story