நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: சங்கரன்கோவிலில் 84 மில்லி மீட்டர் பதிவு


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: சங்கரன்கோவிலில் 84 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 8 Oct 2018 4:15 AM IST (Updated: 8 Oct 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 84 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆலங்குளம், சீதபற்பநல்லூர், மருதமுத்தூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.

இதேபோல் நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டையில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நின்றது. நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்திலும், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்திலும் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.

வாசுதேவநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் சுப்பிரமணியபுரம், வெள்ளானை கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. ரத்தினசாமி கிராமத்தில் தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றன. நேற்று காலை சிவகிரி தாசில்தார் செல்வசுந்தரி தலைமையில் ஊழியர்கள் சென்று அந்த பகுதியில் தேங்கி நின்ற தண்ணீரை அகற்றினர். அந்த பகுதியில் தண்ணீர் வெளியே செல்ல வழியில்லாமல் கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் இருந்தன. அவற்றை ஊழியர்கள் அகற்றினர். அந்த பகுதியில் தெருக்களில் சூழ்ந்த தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்டன. தென்காசியில் பெய்த மழையால் நேற்று காலையில் தென்காசி மலையான் தெருவை சேர்ந்த முருகன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 84 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பாபநாசம் அணைப்பகுதியில் 53 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1199.88 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 106 அடியாக இருந்தது. மேலும் அம்பை, பாபநாசம் பகுதியில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் ஊர்காட்டு தண்ணீர் வருவதால் வெள்ளம் வந்து கொண்டு இருக்கிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 35.27 அடியாக இருந்தது. ஒரே நாளில் 14 அடி உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 49.28 அடியாக உள்ளது.

செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் கருப்பாநதி அணைக்கு 437 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் 59.39 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 69.23 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 65 மில்லிமீட்டர் மழை பெய்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.48 அடியாகவும், ராமநதி 56.50 அடியாகவும், கடனாநதி 66.10 அடியாகவும், வடக்கு பச்சையாறு 20 அடியாகவும், நம்பியாறு 21.98 அடியாகவும், அடவிநயினார் 84 அடியாகவும், குண்டாறு 36.10 அடியாகவும் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-

சங்கரன்கோவில்-84, அம்பை-76, குண்டாறு-76, தென்காசி-71, கருப்பாநதி-65, செங்கோட்டை-61, ராமநதி-60, பாபநாசம்-53, அடவிநயினார்-51, ஆய்குடி-48, நாங்குநேரி-32, பாளையங்கோட்டை-22, சிவகிரி-21, சேரன்மாதேவி-13, கொடுமுடியாறு-12, சேர்வலாறு-12, நெல்லை-11, ராதாபுரம்-9, மணிமுத்தாறு-7.20, நம்பியாறு-5.

Next Story