புதுச்சேரியில் சதுப்புநில காடுகள் அழிப்பு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் சதுப்பு நில காடுகள் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
புதுச்சேரி,
புதுவை சுற்றுச்சூழல் மற்றும் சதுப்புநில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்க தலைவர் செல்வமணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரியில் சதுப்புநில வனப்பகுதி பல்வேறு நிகழ்வுகளால் அழிந்து வருகிறது. குறிப்பாக சதுப்புநில ஆக்கிரமிப்பு மற்றும் புதுச்சேரியின் ஒட்டுமொத்த கழிவு நீருடன் பாலித்தீன் கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுகள் கலக்கின்றன. மேலும் சதுப்புநில வனப்பகுதியில் சதுப்பு நில மரங்களை வெட்டி சேதப்படுத்தி பாலீகீட்ஸ் புழுக்களை பிடித்து இறால் பண்ணை மாபியா கும்பல் சதுப்புநில காட்டை தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றனர்.
இதனால் பல இடங்களில் சதுப்புநில மரங்களை அழித்து இந்த புழுக்களை பிடிப்பதால் சதுப்புநில காடுகள் அழிகின்றன. இதனை புதுவை வனத்துறை கடந்த 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் தடை செய்தது. வனத்துறை கண்காணிப்பால் இவை தடுக்கப்பட்டது. பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் இந்த கும்பல் தனது வேலையை ஆரம்பித்தது. அதன்பின் 2017–ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் வனத்துறை புழுக்கள் வேட்டைக்கு தடை விதித்தது. ஆனால் அந்த தடை வெறும் காகித அளவிலேயே உள்ளது.
இதன் காரணமாக தமிழக இறால் பண்ணை மாபியாக்கள் அப்பாவி பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி இந்த புழுக்களை பிடித்து வருவது தினமும் தொடர்கிறது. இந்த வகை புழுக்களை இக்கும்பல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். புதுசசேரியில் உள்ள தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், நல்லவாடு ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் இவை பிடிக்கப்பட்டு வருவதால் சதுப்புநில வனப்பகுதிக்கும் கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.