கியாஸ் சிலிண்டர்கள் வினியோகத்துக்கு மிரட்டி பணம் வசூல்; மனித உரிமைகள் பேரவை குற்றச்சாட்டு
சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகத்துக்கு வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூலிக்கப்படுவதாக மனித உரிமைகள் பேரவை குற்றஞ்சாட்டியுள்ளது.
புதுச்சேரி,
பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை தலைவர் சக்திவேல் நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவைகளின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி அடித்தட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதோடு கீழ்தட்டு மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் கியாஸ் இணைப்பு பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையையும் ஏற்படுத்திவிட்டது. கியாஸ் சிலிண்டர் விலையும் வாரந்தோறும் உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் முகவர்களிடம் வேலை செய்யும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளில் சிலிண்டர்களை வழங்கிவிட்டு ரூ.50 கட்டாயம் தரவேண்டும் என்று மிரட்டி வசூல் செய்கின்றனர். சில ஊழியர்கள் எங்களுக்கு ரூ.50 வழங்காவிட்டால் அடுத்த முறை எப்படி சிலிண்டர் வாங்குகிறீர்கள் என்பதை பார்க்கிறோம் என்றும், எங்கே வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டுகின்றனர்.
இதனால் மக்கள் பயந்துபோய் அந்த பணத்தை வழங்குகிறார்கள். புதுவையில் கியாஸ் சிலிண்டர்களை வழங்குவதற்காக எண்ணெய் நிறுவனங்களின் 15 முகவர்கள் உள்ளனர். இதில் சில முகவர்கள் மட்டுமே சிலிண்டர்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் ஊழியர்களுக்கு சம்பளம் தருகின்றனர். பெரும்பான்மையான முகவர்கள் ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் முழு கமிஷனையும் எடுத்துக்கொள்கின்றனர். இதன் காரணமாகவும் ஊழியர்கள் மக்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி கூடுதல் பணம் ஏதுமின்றி மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கே சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மக்களின் வீடுகளை சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு சக்திவேல் கூறினார்.