சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பள நிலுவைதொகையை வழங்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை


சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பள நிலுவைதொகையை வழங்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2018 4:00 AM IST (Updated: 8 Oct 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கான சம்பள நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

புதுச்சேரி,

அரசுத்துறை, அரசு நிறுவனங்கள், கார்ப்பரேசன்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சாய்பாபா திருமண நிலையத்தில் கருத்தரங்கு நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சிவக்குமார், விசுவநாதன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன், ஏ.ஐ.டி.யு.சி. செயல்தலைவர் அபிசேகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

*அரசு சார்பு நிறுவனங்கள், முகமைகள், கூட்டுறவு நிறுவன ஊழியர் மற்றும் நெசவாளர்களுக்கு உள்ள சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக பட்டுவாடா செய்திட வேண்டும்.

*அரசு சார்பு நிறுவனங்களில் 450 நாட்கள் பணிமுடித்த அனைத்து பணிநிரந்தரமற்ற தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.

*உரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் அனைத்து அரசு நிறுவனங்களையும் மறுகட்டுமானம் செய்திட வேண்டும்.

*ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

*கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை உறுதியோடும், ஒருமைப்பாட்டோடும் முன்னெடுத்து சென்றிடுவது. ஒத்த கருத்துடைய தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் அனைத்து பகுதி தொழிலாளர்களும் இப்போராட்டத்தில் இணைந்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story