சவுதி அரேபியாவில் குமரி மீனவர்கள் உள்பட 3 பேர் மீது துப்பாக்கி சூடு கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்


சவுதி அரேபியாவில் குமரி மீனவர்கள் உள்பட 3 பேர் மீது துப்பாக்கி சூடு கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 7 Oct 2018 11:15 PM GMT (Updated: 2018-10-08T02:28:42+05:30)

சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்களை ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் குமரி மீனவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

கருங்கல்,

குமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் ஸ்மைலின் (வயது 34), மீனவர். இவரும், முட்டம் பகுதியை சேர்ந்த விஜயன் (33), அவருடைய தம்பி விவேக் (27), ராமநாதபுரத்தை சேர்ந்த செழியன் ஆகிய 4 பேரும் சவுதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று இவர்கள் விசைப்படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற ஈரான் கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஸ்மைலின், விவேக், செழியன் ஆகிய மூவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. உடனே, மீனவர்கள் அவசரம், அவசரமாக கரைக்கு திரும்பினர். தொடர்ந்து, காயமடைந்த 3 பேரும் சவுதி அரேபியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஸ்மைலின் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்பு விசாரணை கைதிகளாக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து மீனவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில், குமரி மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், காயமடைந்த மீனவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும், விசாரணை கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை விரைவில் விடுவித்து சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தால் காயம் அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சவுதி அரேபியாவில் மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. காயமடைந்த மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர வெளியுறவுத்துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story