கோத்தகிரி அருகே 3–வது முறையாக பேக்கரிக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம்


கோத்தகிரி அருகே 3–வது முறையாக பேக்கரிக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:00 AM IST (Updated: 8 Oct 2018 10:10 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே 3–வது முறையாக பேக்கரிக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தன.

கோத்தகிரி,

கோத்தகிரி– கோடநாடு சாலையில் உள்ள எஸ்.கைகாட்டி என்ற இடத்தில் பேக்கரி நடத்தி வருபவர் ஜெகதீஷ்(வயது 48). கடந்த மாதம் 30–ந் தேதி நள்ளிரவில் பேக்கரிக்குள் புகுந்த ஒரு கரடி, அங்கிருந்த உணவு பொருட்களை தின்றதுடன், அலமாரி கண்ணாடிகளையும் உடைத்து அட்டகாசம் செய்தது. இதையடுத்து அந்த பகுதியில் கரடி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதன்பிறகு கரடி நடமாட்டம் இல்லை. இதனால் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியை நிறுத்தினர். ஆனால் கடந்த 3–ந் தேதி அதிகாலையில் அதே பேக்கரிக்குள் 3 கரடிகள் புகுந்தன. மேலும் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பட்டாசு வெடித்து கரடிகளை விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பேக்கரிக்கு இரும்பு ‌ஷட்டர் அமைக்கும் பணியை ஜெகதீஷ் மேற்கொண்டார். பணிகள் முடிவடையாத நிலையில் இரவில் அவரும், தொழிலாளி ஒருவரும் அங்கேயே தங்கினர். நள்ளிரவில் கடைக்குள் ஏதோ சத்தம் கேட்டது. உடனே 2 பேரும் கண் விழித்து பார்த்தனர். அப்போது 3 கரடிகள் கடைக்குள் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இவர்களது கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். பின்னர் தீப்பந்தம் காட்டி கரடிகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் ஜெகதீஷ் கூறியதாவது:–

இந்த பேக்கரியை நம்பி தான் பிழைப்பு நடத்தி வருகின்றேன். ஆனால் கரடிகள் தொடர்ந்து கடைக்குள் புகுந்து வருவதால், அதிகளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். பேக்கரிக்கு பின்புறம் தான் எனது வீடு உள்ளது. இதனால் வீட்டிற்குள்ளும் கரடிகள் புகுந்துவிடும் அபாயம் நிலவுகிறது. எனவே இந்த கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story