கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தி.மு.க.வினர் போராட்டம்
கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். அ.தி.மு.க.வினரும் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலையில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சங்க தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதில் அ.தி.மு.க. சார்பில் 27 பேரும், தி.மு.க. சார்பில் 19 பேரும், கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 பேரும், விவசாய சங்கம் சார்பில் 5 பேரும் ஆக மொத்தம் 53 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
இவர்களின் வேட்பு மனுக்கள் நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பரிசீலனை செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் அலுவலர் சண்முகவேல், அலுவலகத்திற்கு வரவில்லை. அவரின் வருகைக்காக தி.மு.க.வினர் பலர் ஆலையின் முன்பு காத்திருந்தனர். மாலை 2.30 மணி ஆகியும் தேர்தல் அலுவலர் வராததால் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. மாவட்ட பொருளாளர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், வசந்தவேல், துரைராஜ், தங்கம் உள்ளிட்ட பலர், ஆலையின் வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், பிரகாஷ் மற்றும் போலீசார், ஆலையின் நுழைவுவாயில் கேட்டை இழுத்து மூடி தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் ஆலை நுழைவுவாயில் கேட்டை தள்ளிவிட்டு ஆலை வளாகத்திற்குள் தி.மு.க.வினர் சென்றனர்.
தர்ணா போராட்டம்
தொடர்ந்து, அவர்கள் அனைவரும் ஆலையின் வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும், தேர்தலை நியாயமாகவும், முறையாகவும் நடத்தக்கோரியும் கோஷமிட்டனர்.
மேலும் ஆலையின் உயர் அதிகாரிகளை தி.மு.க.வினர் சந்திக்க முயன்றனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் சிலர், ஆலையின் வளாகத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதோடு உயர் அதிகாரிகளை சந்திக்க அனுமதி மறுத்தால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆலை உயர் அதிகாரிகளை சந்திக்க அனுமதி அளிப்பதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் தி.மு.க.வினர் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். செல்போன் கோபுரத்தில் ஏறியவர்களும் கீழே இறங்கி வந்தனர்.
அதன் பிறகு கூட்டுறவு சங்க தேர்தலை நியாயமாகவும், முறையாகவும் நடத்தக்கோரி ஆலையின் உயர் அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் கோரிக்கை மனு கொடுத்தனர். அதோடு தேர்தலை நியாயமாக நடத்தாவிடில் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே கூட்டுறவு சங்கத்துக்கு வந்த தேர்தல் அலுவலர் சண்முகவேல், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 27 வேட்பாளர்களின் இறுதி பட்டியலை அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டினார்.
இதனிடையே ஆலை வளாகத்திற்குள் தி.மு.க.வினர் அத்துமீறி நுழைந்து தேர்தல் அலுவலகம் முன்பு ரகளையில் ஈடுபட்டதாக கூறி மாலை 4 மணியளவில் அ.தி.மு.க.வினர், சர்க்கரை ஆலை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவெண்ணெய்நல்லூர்- உளுந்தூர்பேட்டை சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர்.
இந்த சம்பவத்தினால் பெரியசெவலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story