கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 1,634 மதுபாட்டில்கள் பறிமுதல்
கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 1,634 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி- பூத்துறை செல்லும் சாலையில் ஆரோவில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து அந்த காரை சோதனை செய்தனர் அப்போது அந்த காரினுள் 34 அட்டைப்பெட்டிகளில் 1,634 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் புதுச்சேரி தரமணிபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 21) என்பதும் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சதீசை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story