தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டம் முதலிடம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தகவல்


தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டம் முதலிடம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2018 4:15 AM IST (Updated: 8 Oct 2018 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரே மாதத்தில் 658 பிரசவங்கள் பார்த்து, தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை புரிந்து உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது சுகாதாரம் நோய் தடு்ப்புத்துறை சார்பில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளுக்கான உதடு மற்றும் அன்னப்பிளவு சிறப்பு இலவச சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் கடந்த மாதம் மட்டும் 658 பிரசவங்கள் நடைபெற்றன. ஒரே மாதத்தில் இவ்வளவு பிரசவங்கள் நடைபெறுவது மாநிலத்திலேயே இதுதான் முதல்முறை. ஒரே மாதத்தில் 658 பிரசவங்கள் பார்த்து, தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் இல்லாத அளவுக்கு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறைய வசதிகள் உள்ளன. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

கடந்த 3 மாதங்களில் மாவட்டத்தில் சிறு குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்களை நடத்தி 413 பேருக்கு இருதய நோய் இருப்பதை கண்டுபிடித்து, அதில் 229 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பிறப்பிலேயே கண் பார்வை கோளாறு கண்டறிந்த 19 பேருக்கும், காதில் கோளாறு உள்ள 60 பேருக்கும் அறுவை சிக்கிச்சை செய்யப்பட்டது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம். அப்படி சிகிச்சை பெற்றால் உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர், சிகிச்சை பெறவந்த குழந்தைகளுக்கு பொம்மைகள், சாக்லெட்டுகளை வழங்கினார். அதேபோல் செவிலியர்களுக்கு, குடிநீரில் குளோரின் மற்றும் புளோரைடு சதவீதத்தை கண்டறியும் கருவிகளை வழங்கினார்.

Next Story