வரத்துக் கால்வாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும்; அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவு


வரத்துக் கால்வாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும்; அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 9 Oct 2018 4:15 AM IST (Updated: 9 Oct 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

கண்மாய், குளங்களுக்கு செல்லும் வரத்துக் கால்வாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன் பின்னர் திருப்பத்தூர் உழவர் சந்தையை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், அங்கு வந்த பொதுமக்களிடம் மார்க்கெட் விலை நிலவரம், வசதிகள் குறித்து கேட்டார். பின்னர் திருப்பத்தூர் மேஸ்திராயர் தெரு பகுதியில் உள்ள கால்வாய்கள் சுத்தமான முறையில் உள்ளதா என்றும், இந்த பகுதியில் கொசு மருந்துகள் அடிக்கப்படுகிறதா என்று அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தார். பின்னர் திருத்தளிநாதர் கோவில் எதிரே உள்ள குடிநீர் தண்ணீர் தொட்டி பகுதியை பார்வையிட்ட கலெக்டர் அந்த பகுதியை சுத்தம் செய்ய பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து சீதளிகுளத்தை பார்வையிட்ட கலெக்டர் அந்த குளத்திற்கான வரத்துக் கால்வாய்களையும், பெரிய கண்மாயில் இருந்து நகரின் பல குளங்களை நிரப்பும் நாட்டுக் வாய்க்கால்களை உடனடியாக சீரமைப்பதுடன், ஆக்கிரமிப்பு இருப்பின் அவற்றை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நாட்டு வாய்க்கால் பகுதியில் கழிவுநீர் பாதை வேறு வழியாகவும், நாட்டு வாய்க்கால் பகுதியில் சுத்தமான தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் தற்போது பெய்து வரும் மழை, அதற்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். கலெக்டர் ஆய்வின் போது திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, செயல் அலுவலர் முருகன், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை மற்றும் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story