மகாளய அமாவாசையையொட்டி மெரினா கடற்கரை, நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி


மகாளய அமாவாசையையொட்டி மெரினா கடற்கரை, நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி
x
தினத்தந்தி 9 Oct 2018 4:45 AM IST (Updated: 9 Oct 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

மகாளய அமாவாசையையொட்டி மெரினா கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் ஏராளமானவர்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

சென்னை, 

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திதி கொடுப்பதற்கு உகந்த தினமான இந்நாளில் இறந்த முன்னோர் தங்கள் குடும்பத்தினர் படைக்கும் உணவை அருந்தி அவர்களை வாழ்த்திவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. முன்னோர்களுக்கு திதி கொடுத்து சடங்குகள் செய்வதால் நம்முடைய வாழ்வில் அமைதியும், செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்புக்குரிய மகாளய அமாவாசை தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ராமேஸ்வரம், நெல்லை மாவட்டம் பாபநாசம் மற்றும் ஆறு, கடற்கரை பகுதிகளில் திதி கொடுக்கப்பட்டது.

மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானவர்கள் நேற்று தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளக்கரையிலும் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தங்கள் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு பண்டங்களை தர்ப்பணமாக வழங்கினர். அவல், பொரி ஆகியவற்றை நீரில் வீசி மீன்களுக்கு உணவாக வழங்கினர். சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் உள்பட சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோவில் குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது.

Next Story