அதியமான்கோட்டையில் தடையை மீறி ஊர்வலமாக சென்ற கள் இயக்கத்தினர் கைது


அதியமான்கோட்டையில் தடையை மீறி ஊர்வலமாக சென்ற கள் இயக்கத்தினர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2018 4:00 AM IST (Updated: 9 Oct 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

அதியமான்கோட்டையில் தடையை மீறி ஊர்வலமாக சென்று அதியமான்-அவ்வையாருக்கு கள்ளை படையலிட முயன்ற கள் இயக்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

கள் இயக்க தலைவரும், விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு செயலாளருமான நல்லசாமி தலைமையில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கள் இறக்குவதற்கு அனுமதி கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் கோட்டத்தில் அவ்வையார்-அதியமான் சிலைகள் முன்பு கள்ளை படையலிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அதியமான்கோட்டையில் கள் இயக்க தலைவர் நல்லசாமி தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதியமான்கோட்டம் அருகே கள் இயக்கத்தினர் தடையை மீறி ஊர்வலமாக சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் நல்லசாமி உள்பட கள் இயக்க நிர்வாகிகள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லசாமி மற்றும் நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுதொடர்பாக கள் இயக்க தலைவர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கள் இறக்குவதும், குடிப்பதும் உணவு தேடும் உரிமை. கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு தடை உள்ளது. இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. கள் நமது பாரம்பரிய உணவில் ஒன்றாகும். அதியமான், அவ்வையார் உள்ளிட்ட நமது முன்னோர்கள் கள் அருந்தி உள்ளனர். அதற்கான சான்றுகள் புறநானூற்றில் உள்ளது.

தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. கள் போதைபொருள் என யாராவது நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு வழங்க தயாராக உள்ளோம். கள் இறக்குவதற்கு அனுமதி கோரி 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந்தேதி சென்னையில் யாகம் நடத்த உள்ளோம். அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திரண்டதை போல் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு நல்லசாமி கூறினார்.

முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கள் இயக்க தலைவர் நல்லசாமி மற்றும் நிர்வாகிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Next Story