எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் முழு உருவம் பெறும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்பட்டு முழு உருவம் பெறும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை,
மதுரையில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால் உட்கட்சி பூசல் குறித்து பேசுவதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசுவதற்காக தான் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். உட்கட்சி பூசலுக்கும், பிரதமரின் சந்திப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையும் என அறிவிக்கப்பட்டு விட்டது. எந்த ஒரு திட்டமும் தொடங்குவதற்கு முன்பே நிதி ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது. திட்டம் அறிவித்து அதற்கான பணிகள் நடக்கும்போது தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதுபோல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அது முழு உருவம் பெறும். கட்டுமான பணிகள் தொடங்கிய பின்னர் அதற்கான நிதி பல்வேறு கட்டங்களில் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாளுக்கு நாள் பா.ஜ.க.வின் வாக்குவங்கி அதிகரித்து கொண்டே வருகிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தியதற்கும், பா.ஜ.க.விற்கும் தொடர்பில்லை. எந்த ஒரு நிலையிலும் பா.ஜ.க. தேர்தலை தள்ளிப்போடாது. எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சிந்தனை மன்றத்தின் செயலாளர் லட்சுமிநாராயணன் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில், கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு பாரதியார் பெயர் சூட்ட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்று கொண்ட மத்திய மந்திரி, இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.