அரசுத் துறைகளில் 800 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; ஒரு மாதத்திற்குள் அறிவிப்பு வெளியிட நாராயணசாமி உத்தரவு


அரசுத் துறைகளில் 800 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; ஒரு மாதத்திற்குள் அறிவிப்பு வெளியிட நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 8 Oct 2018 11:00 PM GMT (Updated: 8 Oct 2018 8:18 PM GMT)

புதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள 800 பணியிடங்களை நிரப்ப ஒரு மாதத்திற்குள் அறிவிப்பு வெளியிட அதிகாரிகளுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரசுத்துறைகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதையொ ட்டி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வின் மூலம் உடனடியாக நிரப்புவது குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டம் சட்டமன்ற கமிட்டி அறையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள் அன்பரசு, கந்தவேலு, பார்த்திபன், ஜவகர், தார்செம்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் புதுச்சேரி அரசில் உள்ள காலி பணியிடங்கள், அவற்றை நிரப்புவதற்கான முறைகள், சில பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு அளிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், வழக்குகள் ஆகியவை குறித்து தலைமை செயலாளர் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் விளக்கினார்கள்.

மாநில வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதற்காகவும், புதுச்சேரியில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் அரசு வேலைவாய்ப்பினை பெறுவதற்காகவும் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்பட வேண்டிய சுமார் 800 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படியும், அதற்கான அறிவிப்புகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடும்படியும் அதிகாரிகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

அதேபோல் அனைத்து துறையிலும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வினையும், உரிய காலத்தில் அவர்களுக்கு அளித்திட நடவடிக்கைகள் எடுக்குமாறும், அதற்கான கோப்புகளை அரசுக்கு உடனடியாக சமர்ப்பிக்கும்படியும் துறை செயலாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.


Next Story