அறந்தாங்கி அருகே ஈச்சங்கூடை தயாரிக்கும் பணி மும்முரம்


அறந்தாங்கி அருகே ஈச்சங்கூடை தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:00 PM GMT (Updated: 2018-10-09T02:09:14+05:30)

அறந்தாங்கி அருகே ஈச்சங்கூடை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான்கோட்டை, பச்சலூர், மலையூர் உள்ளிட்ட பல பகுதியில் ஈச்்சங்கூடை பின்னி விற்பனை செய்யும் தொழிலை காலம் காலமாக தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு முன் அனைவரது வீட்டிலும்் ஈச்சங்கூடையும், பனை ஓலை உள்ளிடைவைகளால் செய்யப்பட்ட கூடை, விசிறி, முறம் என வீட்டு உபயோக பொருட்களை இயற்கையான முறையில் பயன்படுத்தி வந்தனர். தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் வந்ததால், ஈச்சங்கூடை, பனை ஓலையில் செய்யப்பட்ட பொருள்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. ஆனால் ஈச்சங்கூடை பின்னி விற்பனை செய்யும் தொழிலாளர்கள் மட்டும் மாறாமல் தங்கள் தொழிலான ஈச்சங்கூடை பின்னும் தொழிலை செய்து வருகின்றனர்.

குறிப்பாக ஆவணத்தான்கோட்டையில் உள்ள ஈச்சங் கூடை பின்னும் தொழிலாளர்கள் இதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து கூடை பின்னும் தொழிலாளர்கள் கூறியதாவது:- தற்போது எந்த வாரி ஓரத்திலும், சாலை ஓரத்திலும் ஈச்சங்கூடை தயார் செய்ய பயன்படும் ஈச்சம் மரங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் 100 நாள் திட்டத்தில் வேலை நடக்கும்போது அதனை வெட்டி விடுகின்றனர். இதனால் நாங்கள் அடர்ந்த காட்டு பகுதியும், மணல் பகுதியையும் தேடி சென்று ஈச்சம் மரங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதன் இலைகளை வெட்டி கொண்டு வருகிறோம்.

பின்னர் அதை கூடையின் அடி பகுதி ஈகு, மேல் பகுதி ஈகு என தரம் பிரித்து கூடை பின்னும் அளவிற்கு வெட்டி காயவைத்து பின்னர் ஈச்சங்கூடை அடிப்பகுதி ஒருவரும் கூடையின் மேல் பகுதி ஒருவரும் சேர்ந்து பின்னி சந்தை நடக்கும் இடத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் கொண்டு சென்று விற்று வருகிறோம். இந்த பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. சந்தை இல்லாத நாட்களில் கிராம பகுதிக்கு கொண்டுபோய் விற்பனை செய்து வருகிறோம். ஈச்சங்கூடை சிறிய, பெரிய அளவில் பின்னப்படுகிறது.

விழாக்காலம் தொடங்கி யதையொட்டி ஒரு ஈச்சங்கூடை ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. 100 கூடை பின்னுவதற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இதில் போதுமான லாபம் இல்லை. வேறு தொழில் தெரியாது என்பதால் இந்த தொழிலை செய்து வருகிறோம். எங்களுக்கு போதுமான அளவு அரசு சார்பில் ஏதாவது சலுகைகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் மானியத்தில் கடன் உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story