‘வீரமகாதேவி’ படத்தில் நடிக்கும் நடிகை சன்னி லியோனை கண்டித்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


‘வீரமகாதேவி’ படத்தில் நடிக்கும்  நடிகை சன்னி லியோனை கண்டித்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2018 4:45 AM IST (Updated: 9 Oct 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

‘வீரமகாதேவி’ படத்தில் நடிக்கும் நடிகை சன்னிலியோனை கண்டித்து கன்னட அமைப்பினர் நேற்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவருடைய உருவப்பொம்ைமயை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.

பெங்களூரு,

‘சவுக்கார் பேட்டை’ எனும் திரைப்படத்தை இயக்கியவர் வடிவுடையான். தமிழ் திரைப்பட இயக்குனரான இவர் ‘வீரமகாதேவி’ எனும் ராணியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ‘வீரமகாதேவி’ என்ற பெயரில் வரலாற்று சிறப்புமிக்க படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகை சன்னிலியோன் நடித்து வருகிறார். இந்த படமானது தமிழ், தெலுங்கு உள்பட வெவ்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துக்கான சுவரொட்டி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வீரமகாதேவி எனும் வரலாற்று சிறப்புமிக்க படத்தில் சன்னிலியோன் நடிக்க கர்நாடக ரக்‌ஷன வேதிகே யுவ சேனை அமைப்பினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக நேற்றும் ‘வீரமகாதேவி’ படத்தில் நடிக்கும் சன்னிலியோனுக்கு எதிராக அவர்கள் பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் ‘வீரமகாதேவி’ படத்தில் நடிக்கும் சன்னிலியோன் இடம்பெற்ற சுவரொட்டிகளுக்கு செருப்பு மாலை அணிவித்தனர். பின்னர், அந்த சுவரொட்டிகளையும், சன்னிலியோனின் உருவப்பொம்மையையும் தீவைத்து எரித்தனர்.

இதுகுறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘தமிழ், தெலுங்கு மொழிகளில் வீரமகாதேவி என்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தில் சன்னிலியோன் நடித்து வருகிறார். கர்நாடகத்தில் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களின் வரிசையில் வீரமங்கை வீரமகாதேவிக்கும் இடம் உண்டு. இந்த படத்தில் சன்னிலியோன் நடிப்பதன் மூலம் கன்னட மக்களின் உணர்வுகள் புண்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த படத்தில் சன்னிலியோன் நடிக்க கூடாது. இல்லாவிட்டால் கர்நாடகத்தில் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதேபோல், அடுத்தமாதம் (நவம்பர்) 3-ந் தேதி தனியார் நிறுவனம் சார்பில் பெங்களூருவில் சன்னிலியோன் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எதிராகவும் நாங்கள் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

Next Story