‘‘இதற்காக தான் மும்பையை நேசிக்கிறேன்" பெஸ்ட் பஸ் டிரைவர், கண்டக்டரின் செயலால் நெகிழ்ந்த பெண்


‘‘இதற்காக தான் மும்பையை நேசிக்கிறேன் பெஸ்ட் பஸ் டிரைவர், கண்டக்டரின் செயலால் நெகிழ்ந்த பெண்
x
தினத்தந்தி 8 Oct 2018 11:04 PM GMT (Updated: 8 Oct 2018 11:04 PM GMT)

பெஸ்ட் பஸ் டிரைவர், கண்டக்டரின் செயலால் நெகிழ்ந்து போன பெண் ஒருவர், ‘‘இதற்காக தான் மும்பையை நேசிக்கிறேன்'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மும்பை,

‘‘இந்த காரணங்களுக்காக தான் நான் மும்பையை மிகவும் நேசிக்கிறேன்" என்ற அடைமொழியுடன் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் ஒருவர் டுவிட்டரில் தகவல் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவை சுமார் 9 ஆயிரம் பேர் லைக் செய்து இருந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரீடுவிட் செய்து இருந்தனர். அப்படி என்னதான் அந்த பெண் டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார் என கேட்க தோன்றுகிறது அல்லவா, இது தான் அந்த சம்பவம்:-

ஆரேகாலனி, ராயல் பாம்ஸ் பகுதியை சேர்ந்த பெண் மன்தசா சேக் (வயது25). இவர் கடந்த 2-ந்தேதி உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று இருந்தார். அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் உறவினர் வீட்டில் இருந்து கிளம்பமுடியவில்லை. இரவு தாமதமாகவே அங்கு இருந்து புறப்பட்டு உள்ளார்.

இவர் நள்ளிரவில் சாக்கிநாக்காவில் இருந்து ஆரேகாலனிக்கு பெஸ்ட் பஸ்சில் சென்றுள்ளார். பஸ் ஆரே காலனிக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு சென்றுள்ளது. பஸ் நிறுத்தத்தில் மன்தசா சேக் இறங்கும் போது, அந்த பஸ்சின் கண்டக்டர் ராஜ் யாராவது உங்களை அழைத்து செல்ல வந்து உள்ளார்களா? என கேட்டுள்ளார். அதற்குஅந்த பெண் யாரும் இல்லை தனியாக தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அப்போது அந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் மயானம் போல காட்சி அளித்து உள்ளது.

இந்த சூழலில் பெண்ணை தனியாக விட்டு செல்வது சரியாக இருக்காது என பஸ் டிரைவர் பிரசாந்தும், கண்டக்டரும் நினைத்தனர். எனவே அவர்கள் பஸ்சை நிறுத்திவிட்டு அங்கே காத்திருந்தனர். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதில், ஏறி மன்தசா சேக் வீட்டிற்கு சென்றுள்ளார். இதில் அந்த ஆட்டோ சரியான பாதையில் செல்கிறதா? என்பதை பார்த்துவிட்டு டிரைவரும், கண்டக்டரும் அங்கு இருந்து பணிமனைக்கு சென்று உள்ளனர்.

பெஸ்ட் பஸ் டிரைவர், கண்டக்டரின் செயலால் நெகிழ்ந்த மன்தசா சேக் அவர்களின் செயல் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த பல்வேறு தரப்பினரும் தனியாக இருந்தபெண்ணை காத்திருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்த பெஸ்ட் பஸ் டிரைவர், கண்டக்டரை பாராட்டி உள்ளனர்.

இது குறித்து மன்தசா சேக் கூறியதாவது:- பஸ் டிரைவர், கண்டக்டரின் சிறிய செயல் எனக்கு மிகப்பெரிய வேறுபாட்டை உணர்த்தியது. எனது குடும்பத்தினர் இங்கு இல்லாத போதும் மும்பை என்னை பத்திரமாக பார்த்து கொள்ளும் என்பது போல உணர்ந்தேன். இதற்காக தான் மும்பையை அதிகம் நேசிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் பற்றி 10 ஆண்டுகளுக்கு மேலாக கண்டக்டராக இருக்கும் ராஜ் கூறுகையில், ‘‘பயணத்தின் போது பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை கையாள்வது குறித்து எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு பெண் பயணிகள் பாதுகாப்பு முக்கியம்.

ஆரேகாலனி போன்ற ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பெண்கள், முதியவர்கள் நள்ளிரவு நேரத்தில் இறங்கும் போது அவர்களின் மீது அக்கறை எடுத்து கொள்வோம்’’ என்றாா்.

Next Story