430 கண்மாய்கள் நிரம்பியது; கலெக்டர் நடராஜன் தகவல்


430 கண்மாய்கள் நிரம்பியது; கலெக்டர் நடராஜன் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2018 3:45 AM IST (Updated: 9 Oct 2018 8:10 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் 430 கண்மாய்கள் நிரம்பி உள்ளதாக கலெக்டர் நடராஜன் கூறினார்.

மதுரை,

மதுரை ஐராவதநல்லூர் அருகே உள்ள வைகை ஆற்றில், நீரின் ஓட்டத்திற்கு தடையாக உள்ள முட்புதர் செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதனை கலெக்டர் நடராஜன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:–

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி முதல்–அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த பணி விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள 6,271 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 1,300 கண்மாய்களில் 430 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நிரம்பும் நிலையில் உள்ளன. அதேபோல் மாவட்டத்தில் உள்ள 22 கண்மாய்கள் பாதிக்கப்படக்கூடிய கண்மாய்களாக கண்டறியப்பட்டு, கரைகளை பலப்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவும் தயார் நிலையில் உள்ளது. எந்தவொரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story