தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி; கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்


தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி; கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Oct 2018 3:45 AM IST (Updated: 9 Oct 2018 8:15 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்தி ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005 நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் ஒரு இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு, அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்த விதமான தகவல்களாக இருப்பினும் அதனை உரிய மனு செய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம். குறிப்பாக தகவல் பெற விரும்புபவர்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை குறிப்பிட்ட துறை சார்ந்த அலுவலகத்தின் பொது தகவல் அலுவலருக்கு, மனுவுடன் ரூ.10 கட்டணம் செலுத்தி மனுவிலேயே கோர்ட் வில்லை ஒட்டி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கோரப்படும் தகவல்களை சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் மனு கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய முறையில் வழங்க வேண்டும். அதேபோல முறையான தகவல் கிடைக்கப்பெறாத பட்சத்தில் மனுதாரர் முதற்கட்டமாக மேல்முறையீட்டு அலுவலரிடத்திலும், அதற்கடுத்த கட்டமாக தகவல் ஆணையத்திலும் மேல்முறையீடு செய்யலாம். இச்சட்டத்தின் கீழ் நியாயமான காரணமின்றி தகவல் தர மறுக்கப்படும் பட்சத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையம் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலருக்கு காலதாமதம் ஏற்பட்ட ஒரு நாளுக்கு ரூ.250 வீதம் ரூ.25,000 வரையில் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில் தேசத்தின் இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கக்கூடிய தகவல்கள், நீதிமன்றத்தால் வெளியிட தடை செய்யப்பட்ட தகவல்கள், அயல்நாட்டு அரசிடம் இருந்து பெறப்பட்ட ரகசிய தகவல்கள், குறிப்பிட்ட எவரின் உயிருக்கேனும் உடல் பாதுகாப்பிற்கேனும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தகவல்கள், புலனாய்வு குற்றவாளிகளை கைது செய்தல் மற்றும் நீதிமன்ற வழக்கு தொடுப்பு ஆகியவற்றிற்கு இடையூறு செய்யக்கூடிய தகவல்கள், அமைச்சரவை ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற சிறப்பு உரிமையை மீறும் வகையிலான தகவல்கள் போன்ற சில தகவல்களை கோருவதற்கு இச்சட்டத்தின் கீழ் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005“ குறித்து பொதுமக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு தகவல் ஆணையம் அக்டோபர் 5 முதல் 12–ந் தேதி வரை தகவல் பெறும் உரிமைச்சட்ட வார விழாவாக கடைப்பிடித்து நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு மாவட்டங்கள் வாரியாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் இந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் இதுபற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story