15 கிராம தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயம் அஞ்சலக அதிகாரி தகவல்


15 கிராம தபால் நிலையங்கள்  கம்ப்யூட்டர் மயம் அஞ்சலக அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 9 Oct 2018 8:36 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 15 கிராம தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது என்று அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறினார்.

நாகர்கோவில்,

தேசிய அஞ்சல் வாரவிழா நேற்று தொடங்கியது. வருகிற 15–ந் தேதி வரை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. முதல்நாளான நேற்று உலக அஞ்சல் தினவிழாவாக கொண்டாடப்பட்டது.

இன்று(10–ந் தேதி) அஞ்சலக வங்கி தினமாக கொண்டாடப்படுகிறது. 11–ந் தேதி தபால் இன்சூரன்ஸ் தினமாகவும், 12–ந் தேதி தபால்தலை சேகரிப்பு தினமாகவும், 13–ந் தேதி வணிக அஞ்சல் தினமாகவும், 15–ந் தேதி தபால் (மெயில்) தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

தென்மண்டல அளவில் (11 மாவட்டங்கள்) கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் முதல் இடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் குமரி மாவட்டத்தில் ரூ.18 கோடிக்கு சேமிப்பு கணக்கு மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அஞ்சல் காப்பீடு திட்டம் மூலம் ரூ.23 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளது. வணிக வளர்ச்சியின் மூலமாக ரூ.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

 நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தபால்தலை வெளியீட்டு நிகழ்ச்சி மூலமாக ரூ.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் கடந்த 7 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பாஸ்போர்ட் புதுப்பித்தல் மற்றும் புதிய பாஸ்போர்ட் பெறுதலுக்காக 6,347 பேர் விண்ணப்பித்து, பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

செல்வமகள் சேமிப்புத்திட்டத்தில் டெபாசிட் தொகை ரூ.1000 ஆக இருந்தது ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கிராம தபால் நிலையங்களை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் நாடு முழுவதும் நேற்று முதல் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் வெள்ளமடம், வாரியூர், இரவிபுதூர், குமாரபுரம், இருளப்பபுரம், அஞ்சுகிராமம், ராஜாக்கமங்கலம்துறை, அழிக்கால், குமாரகோவில், புத்தேரி, ஆஸ்ராமம், எறும்புக்காடு, மணக்கரை, வடக்கு சூரங்குடி, அழகம்பாறை ஆகிய 15 கிராம தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன.

 இதற்காக இந்த 15 கிராம தபால் நிலையங்களுக்கும் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளும் விதமாக புதிய எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தியதும் இந்த எந்திரத்தின் மூலமாக அவரவர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, ரசீது வழங்கப்படும். இந்த திட்டம் தபால் துறையில் ஒரு மைல் கல்லாகும்.

குமரி மாவட்டத்தில் 2 தலைமை தபால் நிலையங்கள், 78 துணை தபால்நிலையங்கள், 187 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. அனைத்து கிராம தபால் நிலையங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளன. மதுரையில் நடந்த கண்காட்சியில் மாத்தூர் தொட்டிப்பாலம் சிறப்பு தபால் உரை கடந்த சில நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இல்லங்களை தேடிச்செல்லும் தபால் வங்கி சேவை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் இதுவரை 2141 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

பேட்டியின்போது உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், துரை, முதுநிலை அஞ்சல் அதிகாரி சொர்ணம், வணிக செயல் அதிகாரி அனில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story