கூடலூர்– கேரள மலைப்பாதையில் கார் உருண்டு விழுந்து; 4 பேர் படுகாயம்


கூடலூர்– கேரள மலைப்பாதையில் கார் உருண்டு விழுந்து; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Oct 2018 10:15 PM GMT (Updated: 9 Oct 2018 5:03 PM GMT)

கூடலூர்– கேரள மலைப்பாதையில் கார் உருண்டு விழுந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கூடலூர்,

கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, கல்லட்டி வழியாக ஊட்டிக்கு மலைப்பாதை செல்கிறது. மேலும் நடுவட்டம் வழியாக மற்றொரு பாதையும் இருக்கிறது. இதேபோன்று கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரளாவுக்கு மலைப்பாதை செல்கிறது. மேலும் கோழிக்கோடு, சுல்தான்பத்தேரிக்கும் சாலைகள் இருக்கின்றன. கூடலூரில் இருந்து கல்லட்டி, நடுவட்டம், கீழ்நாடுகாணி வழியாக செல்லும் சாலைகள் மலைப்பாதை என்பதால் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது அவசியம். இது தொடர்பாக பெரும்பாலான இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளன.

இருப்பினும் சமவெளி பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மலைப்பிரதேச போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 3–ந் தேதி கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 2 பேர் உயிர் தப்பினர். மலைப்பிரதேச போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே மலப்புரத்தில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கூடலூர் நோக்கி கடந்த 7–ந் தேதி அதிகாலை 4 மணியளவில் ஒரு கார் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள 100 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் மலப்புரத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு ஒரு கார் சென்றது. தமிழக– கேரள எல்லையான கீழ்நாடுகாணியில் எதிரே வந்த மற்றொரு வாகனத்துக்கு வழிவிடும்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் காரில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த பிற வாகன ஓட்டிகள் கயிறு கட்டி அவர்களை மீட்டு வழிக்கடவு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்– கேரள மலைப்பாதையில் விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

கேரளா மற்றும் கூடலூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக தொடர் கனமழை பெய்தது. இதில் கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து மிகவும் மோசமாகி விட்டது. கீழ்நாடுகாணி பகுதியில் சாலையில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குண்டும், குழியுமாக கிடக்கும் சாலைகளால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story