கலபுரகியில் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை நீலத்திமிங்கல விளையாட்டு உயிரை பறித்ததா? போலீசார் தீவிர விசாரணை


கலபுரகியில் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை நீலத்திமிங்கல விளையாட்டு உயிரை பறித்ததா? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 10 Oct 2018 3:30 AM IST (Updated: 9 Oct 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

கலபுரகியில் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவனுடைய உயிரை நீலத்திமிங்கல விளையாட்டு பறித்ததா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலபுரகி,

கர்நாடக மாநிலம் கலபுரகி(மாவட்டம்) டவுன் மகாலட்சுமி லே-அவுட்டில் வசித்து வருபவர் சுராஜ். நகை வியாபாரி. இவருடைய மனைவி பூஜா. இந்த தம்பதியின் மகன் சமர்த் (வயது 11). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலையில் அவன் தனது தாயிடம் பானிபூரி கேட்டான்.

இதனால் பானிபூரி வாங்குவதற்காக பூஜா வீட்டில் இருந்து வெளியே சென்றார். இந்த வேளையில் வீட்டில் தனியாக இருந்த சமர்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். வீடு திரும்பிய பூஜா தனது மகன் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டதை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ராகவேந்திரநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமர்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மாணவன் சமர்த், நீலதிமிங்கல விளையாட்டு(புளூவேல்ஸ்) விளையாடியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அவனுடைய உயிரை நீலத்திமிங்கல விளையாட்டு பறித்ததா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனால், கலபுரகி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் மற்றும் போலீசார் சமர்த்தின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் கூறுகையில், ‘மாணவன் சமர்த் கன்னட பாடத்தை சரியாக படிக்காமல் இருந்துள்ளான். இதை அவனது பெற்றோர் கண்டித்தனர். கன்னட தேர்வு இன்று(அதாவது நேற்று) நடைபெற இருந்த நிலையில் நேற்று (நேற்று முன்தினம்) அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதனால் அவன் தற்கொலைக்கு இது காரணமாக இருக்கலாம். நீலதிமிங்கல விளையாட்டு அவனுடைய தற்கொலைக்கு காரணமாக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். இதுகுறித்து ராகவேந்திரநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story