சாலையில் விழுந்த பள்ளத்தை செங்கல் துண்டுகளால் மூட எதிர்ப்பு: நகராட்சி பணியாளர்கள்– ஆட்டோ டிரைவர்கள் வாக்குவாதம்


சாலையில் விழுந்த பள்ளத்தை செங்கல் துண்டுகளால் மூட எதிர்ப்பு: நகராட்சி பணியாளர்கள்– ஆட்டோ டிரைவர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 9 Oct 2018 11:00 PM GMT (Updated: 9 Oct 2018 6:40 PM GMT)

சாலையில் விழுந்த பள்ளத்தை செங்கல் துண்டுகளால் மூட எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி பணியாளர்களுடன் ஆட்டோ டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குன்னூர்,

குன்னூரில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் இருந்து பஸ் நிலைய ஆட்டோ ஸ்டேண்டை ஒட்டி சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக எம்.ஆர்.சி. ராணுவ முகாம் மற்றும் கல்லூரி, சப்ளை டிப்போ, மவுண்ட் ரோடு ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று, வருகின்றன. எனவே அது முக்கிய சாலையாக கருதப்படுகிறது. ஆனால் ஆட்டோ ஸ்டேண்டை ஒட்டியுள்ள இடத்தில் சாலையில் பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. இந்த பள்ளத்தில் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் சிக்கி கொண்டால் வெளியே கொண்டு வருவதற்குள் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அந்த பள்ளத்தில் தவறி விழுந்து காயமடையும் நிலையும் இருந்து வந்தது. எனவே சாலையில் உள்ள அந்த பள்ளத்தை மூட வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே ஆட்டோ டிரைவர்கள் இணைந்து சாலையில் உள்ள அந்த பள்ளத்தில் வாழைக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னரும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, நிதி பற்றாக்குறையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை நகராட்சிக்கு சொந்தமான லாரியில் செங்கல் துண்டுகளை கொண்டு வந்து சாலையில் உள்ள அந்த பள்ளத்தில் கொட்டி மூடும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதை அறிந்த ஆட்டோ டிரைவர்கள் செங்கல் துண்டுகளை கொண்டு பள்ளத்தை மூட எதிர்ப்பு தெரிவித்தும், கான்கிரீட் மூலம் பள்ளத்தை மூட கோரியும் நகராட்சி பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக செங்கல் துண்டுகளை கொண்டு பள்ளம் மூடப்படுகிறது. நிதி கிடைத்ததும் சாலை புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story