போரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தானியங்கி வருகை பதிவேடு அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்


போரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தானியங்கி வருகை பதிவேடு அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 10 Oct 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கான தானியங்கி வருகை பதிவேட்டை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்துவைத்தார். பின்னர் ஸ்மார்ட் வகுப்பில் மாணவிகளுக்கு பாடம் எப்படி கற்பிக்கப்படுகிறது? என்பதை பார்வையிட்டு, அதுபற்றி கேட்டறிந்தார்.

இந்த பள்ளியில் மாணவிகளுக்கான தானியங்கி வருகை பதிவேடு எந்திரம் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவிகள் பள்ளிக்கு வந்தவுடனும், பள்ளி முடிந்து சென்றவுடனும் அவர்களது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். சென்றுவிடும். இந்த தானியங்கி கருவியை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு, அதன் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

விழாவில் அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பெஞ்சமின், கே.என்.ராமச்சந்திரன் எம்.பி., அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- அடுத்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும். தமிழக கல்வித்துறையில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஐ.சி.டி. எனும் ஸ்மார்ட் வகுப்பு 3 ஆயிரம் பள்ளிகளில் நவம்பர் மாத இறுதிக்குள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பறைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

மாணவிகளின் தானியங்கி வருகை பதிவேடு இப்போது முன்னோட்டமாக இங்கு பொறுத்தப்பட்டு உள்ளது. 15 நாட்கள் இதன் செயல்பாட்டை பார்த்து வேறு எந்த பள்ளிகளில் இதனை அமைக்கலாம் என முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவேடு அமைக்கும் பணியும் டிசம்பர் மாத இறுதிக்குள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story